குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய முடியாத விஜய் அரசு.. பி.டி.அரசகுமார் கேசில் தவெக பெரும் சொதப்பல்!
சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கில், குற்றப்பத்திரிகையை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத காவல்துறை மற்றும் தவெக அரசுத் தரப்பின் மெத்தனப் போக்கு காரணமாக, இந்த வழக்கின் முக்கியக் குற்றஞ்சாட்டப்பட்டவரான பி.டி.அரசகுமாருக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று சட்டப்பூர்வ நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மாநிலத்தையே உலுக்கிய ஒரு பிரம்மாண்ட வழக்கில், 90 நாட்களுக்குள் முறையான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் காவல்துறை கோட்டைவிட்டிருப்பது மக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

என்ன இந்த வழக்கு?
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருதல், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் மற்றும் நகர் ஊரமைப்புத் திட்ட (DTCP) அனுமதி உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல தனியார் பள்ளிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
சுமார் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அரசு அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மோசடி நடந்ததால், பின்னர் இதில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.
கைது நடவடிக்கையும், சிறைவாசமும்
புகாரைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 27-ஆம் தேதி பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. ஜூலை மாதத்தில் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.
வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் வீடுகளிலும், அரசகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைகளை நடத்தினர். 250-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எங்கே சறுக்கியது காவல்துறை?
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டால், சட்ட விதிகளின்படி 60 நாட்கள் அல்லது அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் காவல்துறை தனது இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால், கைதான நபருக்கு ஜாமீன் கேட்பதற்கான சட்டப்பூர்வ உரிமை தானாகவே கிடைத்துவிடும்.
அரசகுமார் கைது செய்யப்பட்டு நேற்றுடன் 92 நாட்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரோ நீதிமன்றத்தில் இன்னும் இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. மேலும் ஆதாரங்களைச் சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரப்பட்டதே தவிர, சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.
இதற்கு முந்தைய நாள், அரசகுமார் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவர் அளித்த மனுவை அரசுத் தரப்பு சரியான நேரத்தில் பரிசீலிக்காமல் காலதாமதம் செய்ததே குண்டர் சட்டம் ரத்தானதற்குக் காரணம்.
குண்டர் சட்டம் ரத்தான கையோடு, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அரசகுமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 92 நாட்கள் ஆகியும் அரசுத் தரப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறியதை சுட்டிக்காட்டிய சிறப்பு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, சட்ட விதிகளின்படி அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரூ.25,000 மதிப்பிலான சொந்தப் பிணை மற்றும் இரு நபர் பிணை உத்தரவாதத்துடன், தினமும் காலை 10 மணிக்கு புலன்விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.
விசாரணைக் குழுவின் மெத்தனம் வெளிப்பட்டது எப்படி?
அரசகுமார் வழக்கில் காவல் துறையின் அணுகுமுறை பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது:
காலக்கெடு குறித்த அலட்சியம்: ஒரு பெரிய வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை சட்ட விதி. அப்படி இருந்தும் அந்த கால அவகாசத்தை கவனிக்காமல் விட்டது விசாரணைக் குழுவின் திட்டமிடல் இல்லாத போக்கைக் காட்டுகிறது.
குண்டர் சட்டம் ரத்தான விதம்: ஒரு நபரின் மனு மீது அரசு அதிகாரிகள் தகுந்த நேரத்தில் முடிவெடுக்காமல் இழுத்தடித்த காரணத்தினாலேயே குண்டர் சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இது நிர்வாகத்தின் மெத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
தாமதமான சோதனைகள்: 90 நாட்கள் முடிந்த பிறகு, கால அவகாசம் கேட்பதற்காக அவசர அவசரமாக ஐந்து இடங்களில் சோதனை நடத்துவதும், ஆதாரங்களைத் தேடுவதும் முன்கூட்டியே சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
மக்களின் கேள்வி
ரூ.100 கோடி முறைகேடு, நூற்றுக்கணக்கான பள்ளிகளின் எதிர்காலம், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் தொடர்பு என இவ்வளவு பெரிய முக்கியமான வழக்கில், அரசு நிர்வாகமும் காவல்துறையும் இவ்வளவு மெத்தனமாக செயல்பட்டது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஒருபுறம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு, மறுபுறம் நீதிமன்ற நடைமுறைகளில் சரியான ஆதாரங்களையோ குற்றப்பத்திரிகையையோ தாக்கல் செய்யாமல் விட்டதன் மூலம், குற்றம்சாட்டப்பட்ட நபர் மிக எளிதாக ஜாமீனில் வெளியே வர வழியேற்பட்டுள்ளது. மிக முக்கியமான வழக்குகளில் கூட விசாரணை அமைப்புகள் காட்டும் இத்தகைய அலட்சியப் போக்கு, சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
