குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. முதல்வர் போட்டோவை போட்டு "இப்படி" ஒரு மோசடியா? கொதிக்கும் அன்புமணி
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக கூறி முதல்வரின் புகைப்படத்தோடு பொய்யான முறைகேடு ஒன்று நடப்பதாக பாமக எம்பி அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை
இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஏமாற்ற மாட்டேன்
நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாத 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வாக்குறுதியை அளித்தார். இந்த நிலையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக கூறி முதல்வரின் பெயரில் முறைகேடு நடப்பதாக பாமக எம்பி அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அன்புமணி
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் செய்துள்ள ட்விட்டில், தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை;

முறைகேடு நோக்கம்
பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

அன்புமணி கோரிக்கை
இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும், என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications