10 ஆண்டுகள் கழித்து நகர்ப்புற தேர்தல்.. முதல்முறையாக தேர்தலை சந்தித்த மாநகராட்சிகள் எவை?
சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 11 மாநகராட்சிகளுக்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்றது. அதுபோல் 10 ஆண்டுகள் கழித்து நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 10 மாநகராட்சிகளுக்கு மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கான மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும் அதிமுகவே வெற்றிக் கொடி நாட்டியது.

உள்ளாட்சி தேர்தல்
கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. இதற்கு காரணம் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு பல பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இதனால் வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்தது.

27 மாவட்டங்களில் தேர்தல்
இதையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு வார்டு வரையறை எல்லாம் செய்து முடிக்கப்பட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. பின்னர் திமுக உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து புதிதாக உருவான நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல்
இந்த தேர்தலில் திமுக நிறைய இடங்களில் வென்றது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

21 மாநகராட்சிகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

11 புதிய மாநகராட்சிகளுக்கு தேர்தல்
10 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக சேர்க்கப்பட்ட 11 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அவை - தஞ்சை, திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி, காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி, தாம்பரம், கும்பகோணம் ஆகிய 11 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தம் இருந்த 10 மேயர் பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. அது போல் தற்போது நடைபெற்றுள்ள புதியவை 11+ பழையவை 10 சேர்த்து மொத்தம் 21 மாநகராட்சிகள் யாருக்கு என்பதில் திமுக- அதிமுகவிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் எந்த கட்சி அதிகபட்சமாக மேயர் பதவிகளை அலங்கரிக்க போகிறது என்பது வாக்கு எண்ணிக்கையான இன்றைய தினம் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications