கூடுவாஞ்சேரியில் காருடன் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி! சீர்காழியில் உதவிய ஆட்டோ டிரைவர்கள்!
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவு காருடன் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி, சீர்காழி அருகே ஆட்டோ ஓட்டுநர்களால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கமுதியை சேர்ந்த மலையரசன் என்பவரின் மகள் ரிஷிகா (12). மலையரசன் தனது குடும்பத்தினருடன் கமுதி சென்று விட்டு தனது காரில் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வல்லாஞ்சேரி பகுதியில் அவர் நடத்தும் கிளவுட் கிட்சனில் கணவன், மனைவி இருவரும் உள்ளே சென்றபோது காரில் இருந்த 12 வயது சிறுமியை மர்மநபர்கள் காருடன் கடத்திச் சென்றனர். இவர்கள் வெளியே வந்து பார்த்த போது காரும் இல்லை, சிறுமியும் இல்லை. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவியில் பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் சிறுமியை காரில் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கார் ஒன்று வந்து நின்றுள்ளது.
அதிலிருந்து இறங்கிய சிறுமி அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஓடி வந்து தன்னை கடத்தி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமி இல்லாத நிலையில் மர்மநபர்கள் காரை மட்டும் எடுத்து தப்பிச் சென்றுள்ளதால் போலீஸார் சோதனை சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட வருகிறார்கள். மேலும் சிறுமி அளித்த தகவலின் பேரில் பெற்றோருக்கு சீர்காழி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியை கடத்திச் சென்றது யார்? மலையரசனுடன் முன்விரோதத்தால் யாரேனும் இதை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்மைக்காலமாக சிறுவர், சிறுமிகளை கடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. செஞ்சியில் 8 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் 30 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அவர் இன்னும் கண்டறியப்படவில்லை. இது போல் கள்ளக்குறிச்சியில் ஒரு சிறுமியின் வாயில் துணியை அடைத்து கடத்தவிருந்த வடமாநில இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.


Click it and Unblock the Notifications
