மும்பையில் 13 பேரின் உயிரை பறித்த 'ஹீட் ஸ்ட்ரோக்..' முதலுதவி என்ன? பாதுகாப்பது எப்படி? விவரம் இதோ!
சென்னை: கடுமையான வெயிலினால் வெப்பத்தாக்கு (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு மும்பையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரை பறிக்கும் இந்த ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் முதலுதவி என்ன கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நமது நாட்டில் நடப்பு ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வழக்கமாக மே மாதத்தில் வெயிலின் உக்கிரம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே அக்னி பகவான் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் சென்று விட்டு வருவதற்குள் நொந்து போய்விடுகின்றனர்.
அதுவும் நண்பகல் வேளைகளில் எல்லாம் வெளியில் சென்றால் இளநீர், தர்பூசணி என கடைகளை நோக்கி ஒட வேண்டியுள்ளது. தமிழகத்திலும் வெப்ப நிலை பல மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது. கடுமையான வெயிலினால் வெப்பத்தாக்கு (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படுகிறது..

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்தனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரை பறிக்கும் இந்த ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் முதலுதவி என்ன கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
உடலில் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்பே ஹீட் ஸ்ட்ரோக் ஆகும். நமது உடலின் வெப்ப நிலையும் பிஎச் மதிப்பும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். இது மாறும் போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும். பொதுவாக நீண்ட நேரம் நேரடியாக வெயிலில் இருப்பது அல்லது அதிக வெப்ப நிலையின் போது உடல் உழைப்பில் ஈடுபடுவதால் இந்த பாதிப்பு ஏற்படும்.
*ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படமால் இருக்க உடலில் நீர்ச்சத்து மிகவும் அவசியம். நீங்கள் வெளியே சென்றாலும் சரி வீட்டிலேயே இருந்தாலும் சரி... போதிய அளவி நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அவசியம்.
* வெப்பத்தை உள் இழுக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது. தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், தொப்பி அணிந்து கொள்ளலாம்.
* உடலுக்குக் குளிர்ச்சி தரும்,பழ வகைகளைச் சாப்பிடவேண்டும்.
* ஏசி அறையில் இருந்து கொண்டு சட்டென்று நேரடியாக கடுமையான வெயிலுக்குள் சென்றால் அந்த வெப்பத்தை எதிர்கொள்ள உங்கள் உடல் தயராக இருக்காது. எனவே, வெப்ப நிலை படிப்படியாக அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
* உடல் நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் தான் மீண்டு வந்தவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதை சில வாரங்களுக்கு தவிர்ப்பது நல்லது.
* சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் எமெர்ஜென்சி சிகிச்சை அவசியம். சிகிச்சை அளிக்காவிட்டால் மூளை, இதயம், கிட்னி போன்ற உறுப்புகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கான முதலுதவி சிகிச்சையை பார்ப்போம். வெப்பமான இடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்க வேண்டும். குளிர்விக்க முயற்சிக்க வேண்டும்.
குளிர்ந்த நீரில் ஸ்பான்ஜ்ஜை முக்கி பாதிகப்பட்ட நபரின் உடலில் ஒத்தி எடுக்கலாம். குளிர்ச்சியான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஐஸ் பேக்ஸ் அல்லது குளிர்ச்சியான டவல்கள் உள்ளிட்டவற்றை கழுத்து, இடுப்பு, அக்குள் போன்ற இடங்களில் வைக்க வேண்டும். குளிர்ந்த மெல்லிய துணிகளை உடலில் போர்த்தலாம். உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.












Click it and Unblock the Notifications