தீபாவளி! கூட்டுறவு பண்டக சாலைகளில் அக்.28 முதல் 14 மளிகை பொருட்கள் ரூ 199க்கு விற்பனை!
சென்னை: கூட்டுறவுத் துறை மூலம் தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகிற 28ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியிருப்பதாவது: உறவுகள் ஒன்று கூடி நிறைவுபெற்று, மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீப ஒளித் திருநாளான தீபாவளியாகும். அத்தகைய தீபாவளியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக முதல்வர் ஸ்டாலினால் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவரது அறிவுரையின்படி, கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம பண்டக சாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ப்ரீமியம் (Premium)மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ப்ரீமியம் தொகுப்பில்
- துவரம் பருப்பு- 200 கிராம்
- உளுத்தம் பருப்பு- 200 கிராம்
- கடலை பருப்பு - 200 கிராம்
- வறுகடலை (குண்டு)- 100 கிராம்
- மிளகு- 25 கிராம்
- சீரகம்- 25 கிராம்
- வெந்தயம்- 50 கிராம்
- கடுகு- 50 கிராம்
- சோம்பு- 50 கிராம்
- நீட்டு மிளகாய்- 100கிராம்
- தனியா- 100 கிராம்
- புளி- 100 கிராம்
- ரவை- 100 கிராம்
- ஏலக்காய்- 5 கிராம்
என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ 199 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எலைட் தொகுப்பில்
- துவரம் பருப்பு- 250 கிராம்
- உளுத்தம் பருப்பு- 250 கிராம்
- கடலை பருப்பு - 250 கிராம்
- வறுகடலை (குண்டு)- 200 கிராம்
- மிளகு- 50 கிராம்
- சீரகம்- 50 கிராம்
- வெந்தயம்- 50 கிராம்
- கடுகு- 50 கிராம்
- சோம்பு- 50 கிராம்
- நீட்டு மிளகாய்- 250 கிராம்
- தனியா- 200 கிராம்
- புளி- 100 கிராம்
- ரவை- 100 கிராம்
- ஏலக்காய்- 5 கிராம்
என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பு ரூ 299 க்கு விற்பனை செய்யப்படுகிறது. (ப்ரீமியத்தில் இருக்கும் பொருட்கள்தான் எலைட்டிலும் ஆனால் எலைட்டில் சில பொருட்களின் எடை கூடுதலாக உள்ளது)
அது மட்டுமல்லாது தீபாவளி பண்டிகையை தமிழர்கள் அளவிற்கு சிறப்பாக கொண்டாடுபவர்கள் யாவரும் இல்லை. தீபாவளி பண்டிகையில் எவ்வாறு பட்டாசுகள் தனி இடத்தைப் பிடிக்கிறதோ அது போல் இனிப்புகளும் முதலிடம் பெறுகின்றன. பொதுவாக தீபாவளியன்றி இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
அதற்கேற்றார் போல தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் அதிரசம்- முறுக்கு காம்போ என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரசம்- முறுக்கு காம்போ தொகுப்பில்
- பச்சரிசி மாவு- 500 கிராம்
- பாகு வெல்லம்- 500 கிராம்
- ஏலக்காய் - 5 கிராம்
- மைதா மாவு- 500 கிராம்
- sunland/gold winner sun flower oil- 1/2 லிட்டர்
என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ 190 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த தொகுப்புகள் அனைத்து வெளிசந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே கூட்டுறவுத் துறையின் மூலம் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை வங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications