"உளமாற உறுதி கூறுகிறேன்.." முதல் நபராக சட்டசபை உறுப்பினராக உறுதிமொழி ஏற்ற விஜய்!
சென்னை: தமிழ்நாடு முதல்வராக நேற்றைய தினம் விஜய் பதவியேற்ற நிலையில், 17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கூடியுள்ளது.. இன்றைய தினம் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் முறைப்படி பதவியேற்று கொள்கிறார்கள். முதலில் முதல்வர் விஜய் பதவியேற்ற நிலையில், அவரை தொடர்ந்து மற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த திங்கள்கிழமையே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் கூட, அதன் பிறகு சுமார் ஒரு வாரமாகக் குழப்பம் தொடர்ந்தது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் இருந்தது. 118 என்ற மேஜிக் நம்பரை திரட்ட ஒரு வரமாகவே தவெக தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

விஜய் ஆட்சி
இறுதியில் காங்கிரஸ் இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சியை அமைத்தார். நேற்றைய தினம், விஜய்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யை முதல்வராகப் பதவியேற்ற நிலையில், தொடர்ந்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதற்கிடையே 17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், புனித ஜார்ஜ் கோட்டை வளாகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. கடந்த 60 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் தலைமை ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ளது.
எம்எல்ஏக்கள் பதவியேற்பு
இன்றைய கூட்டத்தில், 2026 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் முறைப்படி பதவியேற்று கொண்டனர். தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா, புதிய எம்.எல்.ஏக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதலமைச்சர் விஜய் தனது உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றார். உளமாற உறுதி கூறுகிறேன் என சொல்லி முதல்வர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, அமைச்சரவை உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதவியேற்று வருகிறார்கள்.
முன்னதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருந்தார். அதில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக தொடரும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே இன்று 233 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் பதவியேற்கிறார்கள்.
நாளை சபாநாயகர் தேர்வு
சட்டமன்ற மரபுகளின்படி உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்று முடித்த பின்னர், புதிய சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகரைத் தேர்வு செய்யப்படுவார்கள். நாளைய தினம் சபாநாயகர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சூழலில், புதிய அரசுக்கும் சபாநாயகருக்கும் சட்டமன்றத்தை வழிநடத்துவது ஒரு சவாலான பணியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications