செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்.. திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முன்வைத்த வாதங்கள் என்ன?
சென்னை: தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த குதிரை பேர புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது அசோக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் செந்தில் பாலாஜி தரப்புக்காக ஆஜரான திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முன் வைத்த முழு வாத விவரங்களையும் பார்க்கலாம்.
சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி தருவாக சில தன்னிடம் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படிஅயில் வழக்குப்பதிவு செய்த போலீசார், யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அளித்தனர். ஆனால் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தரப்பு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதற்கு காவல்துறை பதிலளிக்க கோரி உத்தரவிடப்பட்டது.
இந்த முன் ஜாமீன் வழக்கு நீதிபதி இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்புக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார். அதில் என்.ஆர்.இளங்கோ முன் வைத்த வாதங்கள் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தரப்புக்கு முன் ஜாமீன் கிடைக்க முக்கிய காரணமாக அமைந்தது.
அதில் என்.ஆர்.இளங்கோ, தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை. குதிரை பேரம் பேசியதாக சொல்லப்படும் தொலைப்பேசி பேச்சுகள் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பின்னரே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசை கவிழ்க்க சதி என்று யூகத்தின் அடிப்படையில் கூறி இருக்கிறார்கள். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழாது.
சபாநாயகர் தேர்வுக்கு அத்தனை கட்சிகளும் ஆதரவு அளித்தனர். தற்போது பல்வேறு எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அசோக்குமார் தான் தூண்டினார் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். திருநாவுக்கரசு ஈரோட்டில் இருந்த நாளன்று, அசோக்குமார் அங்கு இருந்தார் என்பதை தவிர்த்து வேறு எந்த ஆதாரமும் இல்லை.
இருவரும் சந்தித்தர்களா? இல்லையா? என்பதை கூட வழக்கில் சொல்லவில்லை. கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இடைத்தேர்தலில் கட்சிக்காக பணியாற்றுவதை தடுக்க இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தப் பணமும் இந்த குற்றச்சாட்டில் வழங்கப்படவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி தரப்புக்கு நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications