பாகிஸ்தான் விமானம் திடீர் மாயம்.. அரபிக்கடலில் விழுந்தது? அமீரகத்தில் கிளம்பியதும் என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு நேற்று இரவு 5 பணியாளர்களுடன் சரக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. அரபிக்கடலில் மேல் பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானத்தில் வழிகாட்டும் அமைப்பான 'நேவிகேஷனல் சிஸ்டம்'மில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்த விமானம் திடீரென்று மாயமானது. அந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த கே2 ஏர்வேஸ் விமான நிறுவனத்தால் போயிங் 737 சரக்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த சரக்கு விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் இருந்து நேற்று இரவு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர். இந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 9.30 மணியளவில் விமானத்திற்கு வழிகாட்டும் 'நேவிகேஷனல் சிஸ்டம்' அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டது.
இதுபற்றி உடனடியாக கராச்சியில் உள்ள விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தேவையான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்த விமானம் பாகிஸ்தானை நெருங்கி கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஓர்மாரா என்ற பகுதியில் உள்ள அரபிக்கடலின் மேல்புறம் விமானம் பறந்தது.
அப்போது திடீரென்று கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்பை இழந்தது. இந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்தவுடன் பாகிஸ்தான் விமான ஆணையம் உள்பட பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் சரக்கு விமானத்தை தேடும் பணியை தொடங்கி உள்ளனர். அரபிக்கடல் பகுதியில் இந்த பணி நடந்து வருகிறது. இந்த விமானத்தின் நிலை என்ன? விமானத்தில் பயணித்த 5 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இந்நிலையில் தான் விமானம் மாயமான சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி flighttradar24 எனும் விமான டிராக்கிங் அமைப்பு முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், ''கராச்சிக்கு மேற்கே சுமார் 155 கடல் மைல் தொலைவில் பறந்தபோது விமானத்தின் அனைத்து தொடர்புகளும் இழக்கப்பட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்தவுடன் பயணித்த உயரத்தில் இருந்து செங்குத்தாக கீழ்நோக்கி விழுந்துள்ளது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானத்தின் உயரம் 1,525 மீட்டர் வரை குறைந்தது.
அடுத்த 30 வினாடிகளில் 1,830 மீட்டர் தொலைவையும், அடுத்த சில வினாடிகளில் 11,140 மீட்டர் உயரத்தில் இருந்து கீழ் நோக்கி விழ தொடங்கி உள்ளது. இந்த விமானம் 335 மீட்டர் உயரத்தில் இருந்தது வரை அதன் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டது. அதன்பிறகு தெரியவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் விமானத்தை தேடும் பணியை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தேடுதல் பணியில் தான் என்ன நடந்தது? என்பது முழுமையாக தெரியவரும்.












Click it and Unblock the Notifications