இந்தியாவுக்கு தான் ஆபத்து! டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. வளைகுடாவில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்
டெல்லி: அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்துவிட்டார். ஒரு வேளை இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல் வெடித்தால் அது உலக நாடுகளை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக இந்தியாவையும் மோசமாகவே பாதிக்கும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடியாக இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் டைம் வேஸ்ட் என்பது போலவும் அவர் கூறியிருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தாக்குதல்களும் கூட தொடங்கிவிட்டன.

என்ன காரணம்
முதலில் ஹார்முஸ் வழியாக சென்ற கப்பல்களை ஈரான் தாக்கியதே இந்த மோதலுக்கு காரணமாகும். ஹார்முஸில் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும் அதை தாண்டி சென்ற கப்பல்களை பல முறை எச்சரித்தும் கேட்கவில்லை என ஈரான் கூறியது. அதேநேரம் தாக்குதலுக்கு நேரடியாக பொறுப்பேற்கவில்லை. மறுபுறம் ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவும் தாக்குதலை நடத்தியது. இதனால் அங்கு மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இது உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்த பதற்றத்தின் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 76 டாலரை தாண்டிவிட்டது. அதாவது டிரம்ப் அறிவிப்பு வந்தவுடனேயே 4% வரை உயர்ந்துவிட்டது. மீண்டும் வளைகுடாவில் மோதல் வெடித்துள்ளது பல வழிகளில் இந்தியாவுக்கு தலைவலியை கொடுப்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 85 சதவீதத்துக்கும் அதிகமான அளவை இறக்குமதி செய்கிறது. அதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால், அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் நேரடியாக எதிரொலிக்கும்.
விலையேற்றம்
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அரசு வரிகளை குறைக்காத பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம். எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகளவில் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியிருக்கும். இதனால் டாலருக்கான தேவை அதிகரிக்கும்.. ரூபாயின் மதிப்பு குறையலாம்.. இது நடந்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மேலும் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவதால், எண்ணெய் மட்டுமல்லாமல் இறக்குமதி செய்யப்படும் பிற பொருட்களும் விலை ஏறும்.
மோசமான பாதிப்பு
எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் போக்குவரத்து செலவையும் உயர்த்தும். இதனால் காய்கறி, உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் போன்ற லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் உயரும். விலையேற்றம் காரணமாக நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது மட்டுமின்றி, எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான நிறுவனங்கள், பெயிண்ட் நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றின் செலவுகள் அதிகரிக்கும். இது இந்திய பங்குச்சந்தையையும் பாதிக்கும்.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் பெரும்பாலும் இங்கிருந்தே கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. இதுவே இந்தியாவை நேரடியாகப் பாதிக்கிறது.
கவனம்
அதேநேரம் ஒரே நாளில் ஏற்பட்ட விலை உயர்வால் இந்தியாவில் உடனடியாக பாதிப்பு பெரியளவில் இருக்காது. இந்த மோதலை ஓரிரு நாட்களில் இரு தரப்பும் பேசி முடித்துக் கொண்டால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், மீண்டும் முழு வீச்சில் தாக்குதல் தொடர்ந்து ஹார்முஸ் முடக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை உயரும். அது இந்தியாவின் இறக்குமதி செலவுகளை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் தொடங்கி ஆடம்பர பொருட்கள் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.














Click it and Unblock the Notifications