செல்போன் சிக்னல் எல்லாம் ஒரு ஆதாரமா? ஜாமீன் மனுவில்.. செந்தில் பாலாஜி தரப்பு வைத்த தரமான பாயிண்ட்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் குதிரை பேரம் நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி தரப்பு முக்கியமான பல வாதங்களை வைத்தது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜா ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பிலும் அரசு தரப்பிலும் மிக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசியல் உள்நோக்கம் கொண்டது: மனுதாரர் வாதம்
மனுதாரர்கள் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையின்உள்ளடக்கங்களை நீதிமன்றத்தில் வாசித்தார். அப்போது அவர், "தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராக கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் புகாரில் இருப்பவை எல்லாம் கற்பனைகள்.
தவெக அரசை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் புகார் அளித்த ஊத்தங்கரை எம்எல்ஏவின் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் கற்பனைகளே தவிர அதில் உண்மையில்லை. சபாநாயகர் அனைத்து கட்சி எம்எல்ஏக்களாலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த வழக்கின் பின்னணியில் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் உள்ளது," என்று வாதிட்டார்.
செந்தில் பாலாஜி கேஸ்
மேலும், கரூர் இடைத்தேர்தல் காரணமாகவே இந்த வழக்கில் தற்போதைய மனுதாரர்களான செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக சில தமிழ் வார இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். காவல் துறையின் குற்றச்சாட்டுகளின்படியோ அல்லது எஃப்ஐஆர்ரின்படியோ இதுவரை எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. வெறும் ₹35 கோடி தருவதாகக் கூறப்பட்டதாக மட்டுமே குற்றச்சாட்டு உள்ளது. மனுதாரர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறார்கள், என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி. குமரேசன் வாதிடுகையில், "இந்த வழக்கு முழுவதும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டுமே ஜோடிக்கப்பட்டுள்ளது.
தனது விருப்பத்திற்கேற்ப மாற்றி பேசுகிறார் - செந்தில் பாலாஜி வாதம்
தொலைபேசியில் நடந்ததாகக் கூறப்படும் சாதாரண உரையாடலை, புகார் தாரர் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றி, தவெக அரசை கவிழ்க்க சதி நடந்தது போல ஒரு சித்திரத்தை உருவாக்கியுள்ளார். சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டரீதியாக சாத்தியமில்லை எனும் போது, அரசை கவிழ்க்க முயற்சி நடந்தது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. காவல் துறையினரே இந்த வழக்கை பெரிதாக்கி வருகின்றனர் .
சட்டசபையில் திமுகவிற்கு வெறும் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அரசை கவிழ்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கையில் வெறும் ஒரு எம்எல்ஏவிற்கு ₹35 கோடி கொடுக்க யார் முன்வருவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகார் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து மட்டுமே பேசுகிறது, நீங்கள் ஏன் அரசை கவிழ்ப்பது பற்றி வாதிடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதுடன்.. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யாணை பார்த்து நீங்கள் உங்கள் வாதத்தை தொடங்குங்கள் என்றும் உத்தரவிட்டார்.
அரசை நிலைகுலைய வைக்கும் சதி.. அரசு தரப்பு கடும் எதிர்ப்பு
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது தொடர்பான மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அவர், இந்த சதித்திட்டம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மற்றொரு ஹோட்டலிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை அடுக்கினார். இந்த கூட்டங்கள் நடைபெற்றதை நிரூபிப்பதற்கான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. அதில் சில காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சதித்திட்டம் தீட்டப்பட்ட குறிப்பிட்ட நாட்களில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டம் அவர்களின் மொபைல் போன் டவர் லொகேஷன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் மேலும் கூறுகையில், "இது சாதாரண லஞ்ச வழக்கு அல்ல, ஆட்சியை நிலைகுலைய வைக்கும் மிகப்பெரிய சதி. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விலைக்கு வாங்க திட்டமிட்டிருந்த 10 எம்.எல்.ஏ-க்களில் ஊத்தங்கரை எம்எல்ஏவும் ஒருவர்.
இந்த வழக்கின் விசாரணை பெங்களூர் வரை நீண்டுள்ளது. அங்கு பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன, இன்னும் பல விஷயங்கள் வெளிவர வேண்டியுள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறியும் தென்படுகிறது. எம்எல்ஏவுக்கு ₹35 கோடியும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் பேசப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, என்று கடுமையாக வாதிட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு இதெல்லாம் ஆதாரமா.. சதித்திட்டம் தீட்டப்பட்ட குறிப்பிட்ட நாட்களில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டம் அவர்களின் மொபைல் போன் டவர் லொகேஷன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.. டவர் ஒரே இடத்தில் இருந்தால் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார்கள் என்று எப்படி சொல்வீர்கள் என்று கடுமையாக கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications