சிக்கிய விஜயபாஸ்கர்.. 1.8 கிலோ தங்கம், 4 ‘சாவி’ ரெய்டில் கட்டுக்கட்டாக கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த அதிரடி சோதனையில், ரூ.18.37 லட்சம் பணம், 1.872 கிலோ கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 ஹார்ட் டிஸ்க், 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகள், அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டில் இறங்கினர்.

'மாஜி' விஜயபாஸ்கர்
முந்தைய அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். இவர் மீது கடந்த 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது, குட்கா விற்பனை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு ஆணங்களையும் பறிமுதல் செய்தனர்.

முறைகேடு வழக்கு
இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சக்கரனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கர் வீட்டில்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஸ்டிரா தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் காலையில் இருந்து சோதனை நடத்தி வந்தனர். விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

1.8 கிலோ தங்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் இன்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஹார்ட் டிஸ்க் பறிமுதல்
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 ஹார்ட் டிஸ்க், 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications