1997ல் வினாத்தாள் கசிவை எதிர்த்து.. ரத்தம் சிந்திய மாணவர் தலைவர்! தர்மேந்திர பிரதான் வரலாறு தெரியுமா
சென்னை: டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பினர் மற்றும் மாணவர் இயக்கத்தின் ஆதரவோடு நடக்கும் போராட்டம், தற்போது நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முறைகேடுகள், தேசிய தேர்வு முகமையின் குளறுபடிகள் மற்றும் தொடர்ச்சியான வினாத்தாள் கசிவு சம்பவங்களைக் கண்டித்து லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கூடிய மாணவர் அமைப்புகள் மீது காவல்துறை தடிஅடி நடத்திய போதிலும், போராட்டம் சற்றும் குறையாமல் சென்னை, பாட்னா, பெங்களூர், ஹைதராபாத் என இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.

இந்த போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வரலாற்று சூழலுக்கு நடுவே மிகவும் வியக்கத்தக்க அரசியல் முரண் ஒன்று இணையத்தில் வைரலாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
1997-ல் என்ன நடந்தது?
இன்று நாடு தழுவிய அளவில் மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் தர்மேந்திர பிரதான், சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு இதே வினாத்தாள் கசிவுப் பிரச்சனைக்காகத் தான் ஒரு மாணவர் தலைவராக வீதியில் இறங்கிப் போராடினார் என்ற வரலாற்று உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1997-ஆம் ஆண்டு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளராக தர்மேந்திர பிரதான் செயல்பட்டு வந்தார். அப்போது ஒடிசா மாநிலத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, புவனேஸ்வரில் உள்ள மாநிலத் தலைமைச் செயலகத்தை நோக்கி சுமார் 1,500 மாணவர்களைத் திரட்டி பிரமாண்ட போராட்டத்தை நடத்தினார்.
அந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய கொடூரமான தடிஅடியில் தர்மேந்திர பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்குக் கைகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவர்களின் உரிமைகளுக்காகவும், வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ரத்தம் சிந்திப் போராடிய அந்த சம்பவம், அன்று ஒடிசா அரசியலில் அவருக்கு ஒரு மிகச் சிறந்த மாணவர் தலைவர் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.
ஒரே பிரச்சனை!
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு, 1997-ல் எடுக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் பழைய புகைப்படங்களும் செய்திகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடி, போலீஸ் தடிஅடியை எதிர்கொண்டு, எலும்பு முறிவு காயங்களைச் சுமந்த 28 வயது ABVP மாணவர் தலைவர் தர்மேந்திர பிரதான்... தற்போது நாட்டின் கல்வி அமைப்பை நிர்வகிக்கும் மத்திய கல்வி அமைச்சராக அமர்ந்து கொண்டு, நீட் மற்றும் பிற போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்களுக்காக அதே மாணவர் சமுதாயத்தின் எதிர்ப்பையும் ராஜினாமா கோரிக்கையையும் எதிர்கொள்கிறார்.
ராஜினாமாதான் கோரிக்கை
அன்று வினாத்தாள் கசிவுக்கு எதிராக ரத்தம் சிந்திப் போராடிய ஒருவர், இன்று நாட்டின் கல்வித் துறைக்கே தலைமை தாங்கும் போது அதே வினாத்தாள் கசிவு புகார்களைத் தடுக்க முடியாமல் திணறுவது வரலாற்று முரண் என சமூக ஆர்வலர்களும் மாணவர் அமைப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய அரசு தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தாலும், போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.
காலத்தின் சக்கரம் எவ்வாறு சுழன்று ஒரே மனிதனை வரலாற்றின் இருவேறு ரோல்களில் நிறுத்தியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
