தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற 2.34 லட்சம் பேர்: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா என ஆய்வு
தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 2.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டனம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் பணி, படிப்பு, தொழில், வணிகம் நிமித்தமாக தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ், ரயில்களில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது. மேலும் இதுவரை 1,07,744 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

அலைமோதிய கூட்டம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.நேற்று மதிய நிலவரப்படி சென்னையில் இருந்து 1.50 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் 1,01,662 பயணிகள் பல்வேறு தேதிகளில் செல்ல ரிசர்வேஷன் செய்துள்ளனர். இதேபோல், ரயில் பயணத்தை விரும்புபவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்ட ரயில்களும் இயக்கப்பட்டன. இதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமம் இல்லாமல் பயணித்தனர். இதனால் எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் 1,400 ஆம்னி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக அரசு பஸ், ரயில், ஆம்னி பஸ்களில் 3 லட்சத்துக்கும் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

சொந்த ஊருக்கு பயணம்
கார், பைக்குகளிலும் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்க ழுக்குன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் சம்பந்தப்பட்ட வழித்தடத்தை பயன்படுத்தி பயணித்தனர். ஜிஎஸ்டி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இன்று காலை முதல் இரவு வரை ஏராளமானோர் சொந்த வாகனங்களில் பயணம் செய்வார்கள் என்பதால் இன்று கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் 6 மற்றும் 7ம் தேதிகளில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவார்கள். எனவே இவர்களின் வசதிக்காக 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்குவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளில் ஆய்வு
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர். வண்டலூர் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் தேவநேசரி ஆகியோர் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பஸ்களில் ஏறி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆம்னி பேருந்தில் பயணம் செய்யும் பயனிகளிடம் சென்று பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா, பாதுகாப்பான பயணம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் முறையாக ஆவணங்கள் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.












Click it and Unblock the Notifications