ஆர்யா போல நடித்து ஆள்மாறாட்டம்.. ரூ.70 லட்சம் மோசடி புகாரில் திருப்பம்.. உண்மைக்குற்றவாளிகள் கைது!
சென்னை: நடிகர் ஆர்யா போல நடித்து ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை ஏமாற்றிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்யா என்று கூறி இவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான வித்ஜா தற்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகவும் வித்ஜா புகார் கொடுத்தார்.
ஆன்லைன் மூலம் தன்னிடம் நட்பான ஆர்யா, காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக இவர் போலீசில் புகார் அளித்தார். அதோடு இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் இவர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு
வித்ஜா தனது மனுவில், என்னிடம் ஆன்லைன் மூலம் காதல் செய்து வந்த ஆர்யா 71 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கினார். நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி ஆர்யா கடன் வாங்கினார். விரைவில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆனால் கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டு சயீஷாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு எதிரான விசாரணையை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.

போலீஸ்
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், புகாரை விசாரித்து வரும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் முன் நேரில் ஆஜராகி ஆர்யா தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். தனக்கு அந்த பெண் யாரென்றே தெரியாது என்று ஆர்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார்.

கைது
இந்த நிலையில்தான் வழக்கில் புதிய திருப்பமாக நடிகர் ஆர்யா போல நடித்து ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை ஏமாற்றிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இரண்டு பேரும் கைதாகி உள்ளனர். இது தொடர்பாக குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை விவரம்
உதவி ஆணையாளர் ராகவேந்திரா கே. ரவி தலைமையில் ஆய்வாளர் சுந்தர் மற்றும் தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்ட போன், ஐபி அட்ரஸ் இதன் அடிப்படையில் விசாரணையை நடைபெற்றது. போன் எண்ணை வைத்து ஆள்மாற்றட்டும் செய்தவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிப்பு
விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் நடிகர் ஆர்யாவாக தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி அந்த பெண்னிடம் பேசி வந்ததும், அவரிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணும் இவரை ஆர்யா என்று நம்பி இத்தனை நாட்கள் பேசி இருக்கிறார். இந்த நிலையில் முகமது அர்மான் மற்றும் அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 மொபைல், போன்கள் 1. லேப்டாப், 1 ஐபேட் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications