Sugar: "கசக்கும் சர்க்கரை!" ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக தாங்க! பாயிண்ட்டை பிடித்த அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80 என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.

sugar anbumani

எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில், வாகன எரிபொருளில் அதிக அளவில் எத்தனால் கலப்பதை மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும், அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட மொலாசஸ் எனப்படும் கரும்பு வெல்லப்பாகு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.

ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில் 58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.

தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில் கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தப்படாததும் தான். இந்த நிலை மாற்றப்பட்டு சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.

ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.

ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383 தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம் ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.

இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி 6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+