ரூ.230 கோடி சொத்து! ரூ. 25 கோடி வீடு! கண்ணம்மா பேட்டை டூ போயஸ் கார்டன்! மிரட்டும் தனுஷ்
சென்னை: நடிகர் தனுஷின் போயஸ் கார்டன் வீடு பேசுபொருளாக மாறி இருக்கும் ஒரு சூழலில் இப்போது அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.230 கோடி இருக்கும் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கியிருக்கிறார். அதற்காகச் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தனுஷ், ""போயஸ் கார்டனில் வீடு வாங்கியது இவ்வளவு பெரிய விசயமாக மாறும் எனத் தெரிந்திருந்தால், பேசாமல் நான் ஒரு சின்ன அபார்ட்மெண்டிலேயே வாழ்ந்திருப்பேன். ஏங்க, நான் எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா? தெருவிலிருந்தால் தெருவிலேயேதான் இருக்க வேண்டுமா?" என்று ஆதங்கப்பட்டுப் பேசி இருந்தார்.

அப்போது முதல் அவரது புதிய வீடு பற்றிய பல செய்திகள் வலம் வர ஆரம்பித்தன. இந்நிலையில்தான் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் ரூ.230 கோடி இருக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி ஆங்கில பத்திரிகையான தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
1. போயஸ் கார்டன் வீடு: இந்தப் புது வீட்டின் விலை தோராயமாக ரூ. 25 கோடி மதிப்பு இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு அழகான மாடித் தோட்டம் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
2. ரோல்ஸ் ராய்ஸ்: தனுஷ் வைத்துள்ள சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஒன்றும் உள்ளது. இது ஆடம்பரத்தின் அடையாளத்தின் சின்னம் என்று பெயர் பெற்றது. இதன் விலை சுமார் ரூ.6.95 கோடி முதல் ரூ.7.95 கோடி வரை இருக்கலாம். இது ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பு சொகுசு கார். மணிக்கு 250 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
3.ஃப்ளையிங் ஸ்பர்: பிரபலங்கள் பலருக்கும் பிடித்தமான கார்தான் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர். இதன் மதிப்பு சுமார் ரூ.3.40 கோடி. இந்த பிரீமியம் சலூன், இரட்டை டர்போசார்ஜ் செய்யப்பட்ட டபிள்யூ12 இன்ஜின் கொண்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் தரையில் பறக்கும் ராஜாளி பறவை இது.

4. ஃபோர்டு மஸ்டாங் ஜிடி: ஒரு பக்கம் அதிவேகம் வேகம் மற்றொரு பக்கம் செயல்திறனை கொண்டது இந்த Ford Mustang GT. இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு. இதன் விலை தோராயமாக ரூ. 75 லட்சம் இருக்கும். 100 கிமீ வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் அடைந்துவிடும் ஆற்றல் கொண்ட வாகனம் இது.
5. ஜாகுவார் XE: மேலே பட்டியலில் உள்ள இரண்டு கார்களை தவிர்த்து மேலும் ஒரு ஜாகுவார் XE ஐ வைத்திருக்கிறார் தனுஷ். இதன் விலையோ சுமார் ரூ.44.98 லட்சம். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் 10 இன்ச் டச்ப்ரோ சிஸ்டம் ஆகிய மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது இந்த வாகனம்.
6. நிகர மதிப்பு: இன்றைக்கு தமிழ்சினிமாவில் உள்ள வெற்றி நாயகர்களில் தனுஷும் ஒருவர். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி இவரது மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 230 கோடி. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பிராண்ட் ஒப்பந்தங்கள்,முதலீடுகள் மூலம் தொடர்ந்து பல கோடிகளைச் சம்பாதித்து வருகிறார். அதன் மூலம் அசைக்கமுடியாத ஒரு பெரும் புகழைச் சம்பாதித்துள்ளார்.

இப்போது பேசு பொருளாக மாறி இருக்கும் போயஸ் கார்டன் வீடு பற்றி தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா சில விசயங்களைப் பேசி இருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியான 'திருடா திருடி' மூலம்தான் தனுஷுக்கு ஒரு கமர்ஷியல் அடையாளம் கிடைத்தது. சிவா பேசுகையில், "இதைப்போன்ற விமர்சனங்களை ஒரு காலத்தில் ரஜினி சந்தித்து இருக்கிறார். விஜயகாந்த் சந்தித்து இருக்கிறார். விஜய்யைக் கூட இவர் எல்லாம் ஒரு நடிகரா எனப் பேசி இருக்கிறார்கள். அப்படித்தான் தனுஷை இவன் போய் போயஸ் கார்டனின் வீடு வாங்குவதா? என சிலர் நினைக்கிறார்கள்.
தனுஷ் ஒரு கடுமையான உழைப்பாளி. சம்பாதித்து வீடு வாங்குகிறார். அவர் ஒரு முன்மாதிரி. தனது சிறு வயது கனவை அவர் எட்டி இருக்கிறார். அப்படி இருந்தும் சிலர் பேசுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அப்படிப் பேசி இருந்தார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications