அலுங்காம குலுங்காம.. தீபாவளிக்கு ஊருக்கு போகனுமா! சிறப்பு பேருந்துகளில் இன்று 2வது நாளாக முன்பதிவு
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கும் பண்டிகைகால சிறப்பு பேருந்துகளுக்கான 2வது நாள் முன்பதிவு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பெருநகரங்களில் பணி, படிப்புக்காக தங்கி இருக்கும் மக்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வார்கள். கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அடித்து பிடித்துக் கொண்டு பேருந்துகள், ரயில்களில் ஏறி பொதுமக்கள் செல்வது வழக்கம். இந்த நாட்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இதனை தவிர்த்து பயணிகளுக்கு உதவும் வகையில் பண்டிகை கால சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்கி வருகிறது.

தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு முன் ஜூலை மாதமே தெற்கு ரயில்வே முன்பதிவை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கால அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு நேற்று தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இந்த தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன்பாக இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் நேற்று முன்பதிவு செய்தனர்.
நவம்பர் 11 ஆம் தேதி பயணம் செய்ய இருப்போர் இன்று முன் பதிவு செய்யலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் அல்லது அதன் செயலி மூலம் இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்லாமல், பேருந்து நிலையங்களில் இருக்கும் முன்பதிவு மையங்களின் மூலமாகவும் முன் பதிவு செய்யலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.


Click it and Unblock the Notifications
