காதலனின் கார் முழுக்க 3,400 முத்தங்கள்.. 5.5 மில்லியன் பிச்சிக்கிட்டு போன வியூஸ்! கடைசியில் ஆப்பு
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இப்படியொரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. காதலன் மீது தனக்குள்ள காதல் எவ்வளவு என்பதை வெளிப்படுதத் சிலர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.. ஆனால் சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே ஒரு பெண், தன் காதலை ரீல்ஸ் வீடியோவாக மாற்றியிருக்கிறார்.
குவாலியரை சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார்.. இவர் சொந்தமாக மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் வைத்திருக்கிறார்.. இவர் மீது, பெண் தோழி ஒருவருக்கு காதல் வந்துவிட்டது.. அதனால் தன்னுடைய காதலை ஆதித்யாவுக்கு வெளிப்படுத்த முடிவு செய்தார்..

காதலனின் மாருதி கார்
எப்போதுமே வெளிநாட்டு ரீல்ஸ் மற்றும் வீடியோக்களில் ஈர்க்கப்பட்ட இந்த பெண் தோழி, காதலின் ஆழத்தையும், வித்தியாசமான முறையிலேயே வெளிப்படுத்த நினைத்தார். இதற்காக ஆதித்யா பயன்படுத்தும் காரின் வெளிப்புறம் முழுவதும் லிப்ஸ்டிக் முத்த தடங்களை பதிப்பது என முடிவு செய்தார். இதற்காக சுமார் 800 முதல் 900 ரூபாய் வரை லிப்ஸ்டிக் வாங்கினார்..
சுமார் மூன்றரை மணி நேரம் காரின் பாகங்கள் முழுவதும் அச்சு அசலாக 3,400 முத்தத் தடங்களை ஒவ்வொன்றாக பதித்துள்ளார். ,இந்த முத்தங்களை பார்த்து ஆதித்யா நெகிழ்ந்து போனார்.. உடனே காதலி காரில் முத்தத் தடங்களைப் பதித்ததை வீடியோவாக எடுத்து, ஆதித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்து விட்டார்.
காதலியின் முத்தங்கள்
பிறகு, படேல் நகர் மற்றும் சிட்டி சென்டர் பகுதிகளில் அந்த முத்த கார் சீறிப்பாய்ந்து ஓடியது. ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தங்களுடன் சாலையில் வலம் வந்த அந்த காரை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.. சில வாகன ஓட்டிகள் இப்படியொரு கார் விற்பனைக்கு வந்துள்ளதோ? என்ற குழப்பத்துடன் நகர்ந்தனர்..
ஆனால் அதற்குள் ஆதித்யா பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட கொஞ்ச நேரத்திற்குள் சுமார் 5.5 மில்லியன் பார்வைகளை கடந்து பரவியது. இணையத்தை கலக்கிய இந்த ரீல் வீடியோ, போக்குவரத்து காவல்துறையினரின் கண்களிலும் பட்டது.
குவாலியர் போக்குவரத்து போலீஸ்
இதைப்பார்த்து அதிர்ந்த குவாலியர் போக்குவரத்து போலீசார், வைரலான வீடியோவில் பதிவாகியிருந்த வாகன பதிவு எண் அடிப்படையில் அதை மும்முரமாக தேடினார்கள்.. இறுதியில் அந்த காரை Thatipur பகுதியில் கண்டுபிடித்து அதனை பறிமுதலும் செய்தனர். கார் உரிமையாளர் ஆதித்யாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதாவது மோட்டார் வாகன சட்டத்தின்படி, கார்கள் தங்களது அசல் தொழிற்சாலை தோற்றத்தையே பராமரிக்க வேண்டும். காரின் அடையாளத்தை மாற்றும் வகையிலும், வாகன பாதுகாப்பைக் குலைக்கும் வகையிலும் வெளிப்பொருட்களை பூசி வலம் வருவது மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவது போன்ற சட்ட விதிகளை மீறியதாகும்.. எனவே ஆதித்யாவிற்கு 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
செம ட்விஸ்ட்
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அதிர்ந்துபோன ஆதித்யா சிகர்வார், தனது தவறை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். உடனடியாக அபராத தொகையைச் செலுத்தியதுடன், போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே அதிகாரிகளின் முன்னிலையில் காரில் இருந்த அத்தனை முத்தத் தடங்களையும் துடைத்து அழித்து சுத்தப்படுத்தினார்.. இதையடுத்து அந்த மாருதி கார், அதன் பழைய தோற்றத்திற்கு மாறியது.
இன்ஸ்டாகிராமில் வைரலாக வேண்டும் என்ற ஒரே ஆசையில் காதலியுடன் செய்த இந்த செயல், ஆதித்யாவுக்கு அபராதத்தையே பரிசாக தந்துவிட்டது.. அத்துடன் டிராபிக் விதிகளை மீறுவோருக்கு இந்த சம்பவம் ஒரு தகுந்த பாடமாகவும் அமைந்துள்ளது...!!


Click it and Unblock the Notifications
