சலவை சமூகத்தில் முதல் நீதிபதி! கூலித் தொழிலாளி குடும்பத்தில் 2 நீதிபதிகள்!
சென்னை: வறுமை வாட்டி எடுத்தபோதும் மனம் தளராமல் படித்து நீதிபதிகளாக மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி பலரையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளியில் படித்தவர் நீதிபதி தேர்வில் வென்றுள்ளார். இதுவே முக்கியமான செய்தி. அதைத்தாண்டி இவர் கூலித்தொழிலாளி மகள் வேறு. அவர் இன்று நீதிபதி தேர்வில் வென்றுள்ளார்.

அதுதான் அதிசயமான செய்தி. இவரை ஒரு படி முந்திச் சென்றுள்ளார் காஞ்சிபுரம் இளைஞர் ஒருவர். அவர் சலவைத் தொழிலாளி மகன். அவர் இன்று நீதிபதி ஆகி இருக்கிறார். இவர்களைப் போலவே 36 வயதில் கூலித்தொழிலாளி மகன் ஒருவர் நீதிபதி ஆகியுள்ளார்.
இந்த ஒட்டுமொத்த செய்தியும் கேட்கும்போது தமிழ்நாடு எந்தளவுக்குக் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறது என்பது நிரூபணமாகிறது.
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ளத்து திருத்துறைப்பூண்டி. அதன் அருகே உள்ளது நாலாநல்லூர் என்ற சின்ன கிராமம். அங்கே வசித்து வரும் கணேசன் மற்றும் சந்திரா தம்பதியின் மகள் சுதா. இவரது பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தத் தம்பதியின் வீடு கூரைக் கொட்டகையைவிடக் கொஞ்சம் வசதிகள் குறைந்ததுதான். பூசப்படாத கல் சுவர் நான்கு சுற்றிலும் ஒப்புக்கு நிற்கிறது. மேலே நைந்து போன நான்கு கீற்றுகள். அதற்குள் இரண்டு நபர்கள் சேர்ந்து ஒன்றாகப் படுக்க முடியாத அளவுக்குச் சின்ன இடம். இதுதான் சுதாவின் வீடு.
இந்த மாதிரியுள்ள ஒரு குடும்பச் சூழலிலிருந்து படித்து முன்னேறி இன்று உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று நீதிபதியாகியுள்ளார் சுதா.

அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரைப் படித்த சுதா, அதன்பின்னர் திருவிக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின்னர் சட்டம் படிப்பதற்காக ஆசை அவர் மனதில் உண்டாகி இருக்கிறது.
ஆகவே நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை மேற்கொண்டார். அதில் வெற்றிபெற்றதும், திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார்.
அதன்பிறகு டிஎன்பிஎஸ் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் பங்கேற்று இப்போது நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட சரியாகக் கிடைக்காத சுதா, இன்று இந்தியாவே வியக்கும் நீதித்துறைக்குள் ஒரு நீதி தேவதையாகக் காலடி எடுத்துவைத்துள்ளார்.

இந்தச் சாதனையால் அவரது கிராமே வியப்பில் ஆழ்ந்து உள்ளது. அவரது நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் இவரது வெற்றியை வினயல் பேனர் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
"2023இல் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பெரிய குடும்ப பின்னணி எல்லாம் எனக்குக் கிடையாது. பொருளாதார நிலையும் பெரிய அளவில் இல்லை. பெரிய பெரிய அகாதெமியில் லட்சக் கணக்கில் பணம் கட்டி படிக்கக்கூடிய பண வசதியில் இல்லாதவள் நான்.

அப்பா, அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஒரு விவசாயத் தொழிலாளி. அம்மாவுக்கும் கூலி வேலைதான். ஆனால், அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ஒரு வைராக்கியத்துடன் படித்தேன். எப்படியாவது நம் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உத்வேகம் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. வீட்டில் மொத்தம் 4 பேர் உள்ளோம்.
என் படிப்புக்கு மாமாதான் உதவினார். அவரது உதவிமட்டும் இல்லை என்றால் நான் இந்தளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்கிறார் இந்தக் கிராமத்து நீதிபதி.

இவரைப்போலவே காஞ்சிபுரத்தில் உள்ள சலவைத் தொழிலாளியான கணேசன் என்பவரின் மகன் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று சிவில் நீதிபதியாக ஆகியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது சேக்குப்பேட்டை. அங்கே உள்ள தெற்குத் தெருவில் வசித்து வருகின்றனர் கணேசன் மேகலா தம்பதி. கணேசன் சலவைத் தொழிலாளியாக உள்ளார். இவர்களது இரண்டாவது மகன் தான் பாலாஜி. இவர் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பைப் படித்து வழக்கறிஞரானார்.

அதன்பின்னர் சிவில் நீதிபதிக்கான முதல்நிலைத் தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்றார். நேர்முகத் தேர்வையும் சிறப்பாகச் செய்த அவர், இப்போது வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சிவில் நீதிபதி தேர்வாகி உள்ளார்.
"பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார்கள். அவர்கள் சலவைத் தொழில் செய்து கொடுத்த பணத்தில்தான் படித்து முடித்தேன். அவர்கள் சலவை செய்ய ஒவ்வொரு துணியிலும் என் படிப்பாகப் பணத்தை நான் பெற்றுள்ளேன்.

நான் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்றதும் உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள். அப்புறம் தான் தெரிந்தது சலவைத் தொழிலாளர் சமூகத்திலிருந்து நான் தான் முதல் நீதிபதியாக வந்துள்ளேன் என்பது" என்கிறார்.

இவர்களைப் போலவே மயிலாடுதுறை மாவட்டம் தங்கம்பாடி அருகே உள்ள முனிவலம்குடியில் கூலி வேலை செய்துவரும் சுப்பிரமணியன் அஞ்சம்மாள் தம்பதியின் மகன் பால தண்டாயுதம் கடின உழைப்புக்குப் பின் நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். ஏழ்மையை வென்று 36 வயதில் நீதிபதியாகி உள்ள பால தண்டாயுதத்திற்கு ஊர்மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு மேலாக இன்னும் அதிகம் படித்து மேல்நிலைக்குச் செல்லவேண்டும் என்பதால் படிப்பை மேலும் தொடர உள்ளேன் என்கிறார் பாலாஜி. அழுக்கை வெளுத்த சமூகத்திலிருந்தவர் இனி நீதித்துறையில் படிந்துள்ள கறையையும் வெளுப்பார் என நாம் நம்பலாம்.












Click it and Unblock the Notifications