தொடர் விடுமுறை: சென்னை டூ செங்கல்பட்டு வரை கூட்ட நெரிசல்.. ஊர்ந்தபடியே நகர்ந்த வாகனங்கள்!
சென்னை: தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாட்டின 75ஆவது சுதந்திர தினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஏற்கெனவே விடுமுறை என்பதாலும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை சேர்ந்து வருவதாலும் சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

ஊர்கள்
அது போல் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர், படிப்போர் என அனைத்து தரப்பினரும் ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு, பெருங்களத்தூர், செங்கல்பட்டு சுங்கச்சாவடி உள்பட்ட பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன நெரிசல்
இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. மேலும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர் விடுமுறை
தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீறி அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

கடும் பாதிப்பு
மேலும் இன்று அதிகாலையிலும் கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் இருந்தது. இதனால் அதிகாலை ஷிப்ட்டிற்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமானோர் விடியவிடிய காத்திருந்து பேருந்துகளில் ஏறிச்செல்லும் நிலை ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
