3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! சீமானுடன் மோதிய வருண்குமார் IPS டிரான்ஸ்ஃபர்!
சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குற்றப்பிரிவு டிஐஜியாக இருந்த வருண்குமார், ஈரோடு சிறப்பு அதிரடி படை டிஐஜியாக இடமாற்றப்பட்டார்.
தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குற்றப்பிரிவு (சிஐடி) டிஐஜியாக இருந்த டாக்டர் வி.வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சிறப்பு அதிரடிப்படையின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த டிஐஜி விக்ரமன், சென்னை குற்றப்பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது வருண்குமார் ஐபிஎஸ்ஸுக்கு பதிலாக விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அது போல் கட்டாயக் காத்திருப்பில் இருக்கும் ரகுபதி ஐபிஎஸ், தற்போது தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை பகுதி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே ஒரு வழக்கில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன் வைத்தனர். திருச்சி டிஐஜியாக பணிபுரிந்த வருண்குமார் தற்போது சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் அக்கட்சியினர் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அது போல் இந்த வழக்கை ரத்துச் செய்யக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது நீதிபதி விக்டோரியா கவுரி கூறுகையில், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினால் பிரச்சினையே இல்லை. அதிகாரித்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. இது போன்ற விவகாரங்களில் கீழமை நீதிமன்றங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறி கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications