170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்!
சென்னை: தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், போல் டிராக்கர் (Poll Tracker), லோக் போல் (Lok Poll) மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள், கோட்டை நோக்கிய பயணத்தில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதைப் போட்டு உடைத்திருக்கின்றன.

லோக் போல் கணிப்பு: அறிவாலயத்தின் 'மெகா' ஹேப்பி!
லோக் போல் அமைப்பின் மெகா சர்வே முடிவுகள் அறிவாலயத்தை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
திமுக கூட்டணி: 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுமார் 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைக்கும்.
தனிப்போர்: இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கூட்டணி 180 இடங்களைத் தாண்டும்போது, திமுக மட்டுமே தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் 'ஆட்சியில் பங்கு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அக்னி நியூஸ் சர்வீஸ்: மண்டலங்களை வாரிச் சுருட்டும் உதயசூரியன்!
அக்னி நியூஸின் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் யோசனையைக் கொடுத்துள்ளன.
கோட்டை வசமாகும்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்தைக் காட்டும்.
மண்டல வாரியான 'கிளீன் ஸ்வீப்': - சென்னை: 37-ல் 36 இடங்கள் திமுக வசமாகும். அதிமுகவிற்கு வெறும் 1 இடம் மட்டுமே!
மத்திய மண்டலம்: 37-ல் 35 இடங்களில் திமுகவின் ஆதிக்கம்.
கொங்கு & வடக்கு: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கேயும் திமுகவே முந்துகிறது. மேற்கில் 50-ல் 32 இடங்களையும், வடக்கில் 52-ல் 35 இடங்களையும் திமுக தட்டிச் செல்கிறது.
போல் டிராக்கர்: 'உச்சாணிக் கொம்பில்' உதயசூரியன்!
போல் டிராக்கர் முடிவுகளும் திமுகவிற்குச் சாதகமாகவே 'பஞ்ச்' வைக்கின்றன.
வெற்றி வாகை: திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றும். 42.7% வாக்கு விகிதத்துடன் அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.
இது எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
விஜய்யின் தவெக: ஓட்டு இருக்கு... சீட்டு இல்லையா?
இந்த மூன்று சர்வேக்களிலும் உற்றுநோக்கப்பட வேண்டியது நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'.
லோக் போல்: 23.9% வாக்குகள் கிடைத்தாலும் 8-10 இடங்கள் மட்டுமே.
போல் டிராக்கர்: 19.2% வாக்குகளுடன் 6-12 இடங்கள் மட்டுமே.
அக்னி நியூஸ்: 9.7% வாக்கு விகிதத்துடன் மூன்றாவது இடம்.
வாக்கு சதவீதத்தில் இரட்டை இலக்கைத் தொட்டாலும், அது தொகுதிகளாக மாறாமல் சிதறுவது தவெக-விற்குப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 'மெயின் பிக்சரில்' வர இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
அதிமுக மற்றும் இதர கட்சிகளின் கதி?
அதிமுக: லோக் போல் கணிப்புப்படி 38-42 இடங்கள், போல் டிராக்கர் படி 46-52 இடங்கள் என அதிமுகவின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்கவைப்பதற்கே எடப்பாடி பழனிசாமி கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாம் தமிழர்: சீமானின் கட்சி 5.1% வாக்குகளைப் பெற்றாலும், அதிகபட்சமாக 2 இடங்களை மட்டுமே எட்டும் எனத் தெரிகிறது.
இந்த மூன்று சர்வேக்களின் கூட்டு முடிவும் சொல்லும் செய்தி ஒன்றுதான்: "2026-ல் திமுகவின் ஹாட்ரிக் வெற்றிக்கு இப்போதைக்கு முட்டுக்கட்டை போட ஆள் இல்லை." எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவது திமுகவிற்குப் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. கூட்டணிக் கணக்குகள் இனி மாறினாலும், இப்போதைய நிலவரப்படி 'ஸ்டாலின் மீண்டும் முதல்வர்' என்பதே கள எதார்த்தமாகத் தெரிகிறது!












Click it and Unblock the Notifications