3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மத்திய இணையமைச்சர் உள்பட 3 சிட்டிங் எம்பிக்கள் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. அந்த எம்பிக்கள் யார் யார்? அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

3-sitting-mps-contest-in-tamil-nadu-assembly-election

தேர்தலில் 4 முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.

3 எம்பிக்கள் போட்டி

தற்போது திமுக கூட்டணியில் 233 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் இன்னும் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. அதேவேளையில் அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 3 எம்பிக்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு லோக்சபா எம்பி, 2 ராஜ்யசபா எம்பிக்கள் அடங்குவர். இந்த 3 எம்பிக்கள் யார்? அவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது ஏன்? எந்த தொகுதியில் களமிறங்குகின்றனர்? என்பது பற்றிய விவரம் வருமாறு:

மத்திய இணையமைச்சர் எல் முருகன்

இதில் முதலில் நாம் பார்ப்பது மத்திய இணையமைச்சர் எல் முருகன். இவர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி உள்ளார். இவரது பதவிக்காலம் 2030ம் ஆண்டு வரை உள்ளது. இந்நிலையில் தான் எல் முருகன் அதிமுக - பாஜக கூட்டணியில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி)சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளார். தற்போது இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் தனபாலுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எல் முருகன் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் வழியாக பட்டியலினத்தவர்களின் வாக்குகளை மாநிலம் முழுவதும் கட்சிக்கு கொண்டு வர முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது. இதனால் எல் முருகன் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

திருமாவளவன்

இதில் 2வதாக நாம் பார்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இவர் லோக்சபா எம்பியாக உள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் தொல் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் மாறும் எனக்கூறி திருமாவளவன் களமிறங்கி உள்ளார். அதோடு விஜயின் வருகையால் விசிகவின் ஓட்டு வங்கி அவர் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. இதனை தக்கவைக்கும் வகையில் திருமாவளவன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி தேர்தலில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தொங்கு சட்டசபை கூட அமையலாம். அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால் திமுக ஆதரவு கேட்டால் அமைச்சர் பதவியை தொல் திருமாவளவன் கேட்கலாம். இதனால் அவர் மாநில அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவி சண்முகம்

இந்த பட்டியலில் 3வது நாம் பார்க்கும் நபர் தான் அதிமுகவின் சிவி சண்முகம். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் ராஜ்யசபா எம்பியானார். இவரது பதவிக்காலம் 2028 வரை உள்ளது. ஆனால் தற்போது அவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்குகிறார்.

இந்த முறை திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க அதிமுக முயன்று வருகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் அதிமுகவில் அமைச்சர் பதவியை பெறும் நோக்கில் ராஜ்யசபா எம்பியாக இருந்து கொண்டு சிவி சண்முகம் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுகவின் வன்னியர் சமுதாய தலைவராக வலம் வரும் சிவி சண்முகம், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+