82 மனைகளுக்கு 30 நாட்கள் கால அவகாசம்.. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் நெரிசலை குறைப்பதற்காக முதல் முழுமை திட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் 203 ஏக்கர் பரப்பளவில் 1991-ல் சாத்தாங்காட்டில் இரும்பு மற்றும் எக்கு அங்காடியானது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் தோற்றுவிக்கப்பட்டது. இதில் ஒதுக்கீடு பெற்று பதிவு செய்யாதவர்களுக்கு கடைசியாக ஒருமுறை வாய்ப்பு வழங்கி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் நெரிசலை குறைப்பதற்காக முதல் முழுமை திட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் 203 ஏக்கர் பரப்பளவில் 1991-ல் சாத்தாங்காட்டில் இரும்பு மற்றும் எக்கு அங்காடியானது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் தோற்றுவிக்கப்பட்டது. சாத்தாங்காட்டில் இரும்பு மற்றும் எக்கு சந்தையினை சந்தை பகுதி என்று அறிவித்து 1999-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

சாத்தாங்காடு வணிக வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மனைகளில் 82 ஒதுக்கீட்டுத்தாரர்களின் மனைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த மனைகள் இது நாள் வரை உரிய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத மற்றும் பதிவு செய்யாத ஒதுக்கீடுதாரர்களை ஒதுக்கீட்டு ஆணையில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு பலமுறை பதிவஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றும், நேரில் சார்பு செய்ய முயன்றும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
எனவே, மேற்கண்ட 82 பதிவு செய்யப்படாத ஒதுக்கீடுதாரர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மனை ஒதுக்கீடுதாரர்கள் தகுந்த ஆவணங்களோடு 30 தினங்களுக்குள் சாத்தாங்காடு அங்காடி நிர்வாகக் குழு (இரும்பு மற்றும் எக்கு அங்காடி), அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு வரத்தவறியபட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில், ஒதுக்கீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாலைகள்
பெருநகர சென்னை மாநகராட்சி சாலைகளில் முடிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில் விவரம்: பெருநகர சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளம் கொண்ட 488 பஸ் சாலைகள் மற்றும் 5 ஆயிரத்து 653.89 கி.மீ. நீளம் கொண்ட 35 ஆயிரத்து 978 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.489.22 கோடியில் 648.75 கி.மீ. நீளத்திற்கு 3 ஆயிரத்து 987 எண்ணிக்கையிலான சாலைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, கடந்த மே 20-ந் தேதி மற்றும் ஜூன் 20-ந் தேதி பணியானை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1,951 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதர சாலைப் பணிகளை வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடித்திட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே போன்று, பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சேவைத் துறைகளின் மூலம் 2,995 சாலைகளில் 479.41 கி.மீ. நீளத்துக்கு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் அறிவுரையின்படி சாலை வெட்டு சீரமைக்கும் பணி மேற்கொள்ள தடையில்லா சான்று பெறப்பட்டுள்ள அனைத்து பணிகளும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications