துபாய் டூ சென்னை.. வந்தே பாரத் மிஷனில் அடுத்தடுத்து இயக்கப்பட்ட 2 விமானங்கள்.. 360 பேர் வந்தாச்சு
சென்னை: 40 நாட்களுக்கு மேலான காத்திருப்புக்குப் பிறகு, துபாயில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை அதிகாலை 360 இந்தியர்கள் சென்னையில் வந்து இறங்கியுள்ளனர்.
'வந்தே பாரத் மிஷன்' என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியை அடிப்படையாக கொண்டது.

ஐஎக்ஸ் 612 மற்றும் ஐஎக்ஸ் 540 ஆகிய இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு துபாயில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கின.
ஐஎக்ஸ் 612இல் மொத்தம் 182 பயணிகள் இருந்தனர். இதில் 151 பேர் ஆண்கள், 28 பெண்கள். மேலும் மூன்று பேர் குழந்தைகள். ஐஎக்ஸ் 540இல் 177 பயணிகள் இருந்தனர். அதில், 138 ஆண்கள் மற்றும் 39 பெண்கள்.

விமான நிலையம் வந்த பயணிகளை ஸ்க்ரீன் செய்து, சென்னையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மத்திய அரசு மே 7 முதல் சர்வதேச மீட்பு விமான நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர் சென்னையில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானங்கள் இவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக வந்தே பாரத் மிஷன் மூலம், மே 7 முதல் 14 வரை 64 விமானங்கள் இயக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள், தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள்.

இதனிடையே, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு விமானத்தில் பயணிகள் அழைத்துவரப்படுகிறார்கள்.
இன்று காலை சென்னை வந்த பயணிகளில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணும் உண்டு. அவரது கணவர் துபாயில் இறந்துவிட்டார். கணவரது சடலத்தோடு ஏர் இந்தியா விமானத்தில் அவர் சென்னை வந்தார். இந்திய துணைத் தூதரகம் வழங்கிய இறப்புச் சான்றிதழின் படி, அந்த ஆணுக்கு 36 வயது. இருதய செயலிழப்பு காரணமாக அந்த நபர் இறந்துள்ளார். இதனிடையே, விமான நிலையத்திற்கு வந்ததும், அந்தப் பெண் தனது கணவர் உடலை ஆம்புலன்ஸ் மூலம், செங்கோட்டைக்கு கொண்டு சென்றார்.












Click it and Unblock the Notifications