தென் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை...குமரிக்கடல் பகுதியில் சூறாவளி - வானிலை மையம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. குமரி கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசும் என்பதால் இன்று அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் நிவர் புயலும், இம்மாத ஆரம்பத்தில் புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.

தமிழகத்தில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இடையில் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவியது. இரவு தொடங்கி காலை 7 மணிவரை கடுங்குளிர் நிலவும் சூழ்நிலையில் மாலை நேரங்களில் திடீரென மழை கொட்டிவிட்டு போகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதி, மதுக்கூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசும் என்பதால் இன்று அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாலத்தீவு பகுதிகளில் நாளை மணிக்கு 55 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications