அதிமுகவில் ஜெயித்த 4 "தளபதிகள்" இப்போது எதிரிகள்.. எடப்பாடியின் அடுத்த பிரம்மாஸ்திரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிப்பும் தாமதமாகி வருகிறது. ஆனால், இந்த தேர்தல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான சோதனையாக மாறியுள்ளது. கட்சியின் தலைமையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், இப்போது தேர்தல் களத்திலும் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.. இதற்கு ஒரு காரணமும் உள்ளது..!!

காலியாக உள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் முன்பு அதிமுக வசம் இருந்தவை. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலையில் சி. விஜயபாஸ்கர், பெருந்துறையில் எஸ். ஜெயக்குமார், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். திருச்சி கிழக்கில் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்தத் தொகுதியும் காலியாகியுள்ளது.

AIADMK TVK Edappadi Palanisamy

இதனால், அதிமுகவுக்கு 2 சவால்கள் உள்ளன. ஏற்கனவே பெற்ற வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்று. கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏக்களை எதிர்கொள்வது மற்றொன்று.

அதிமுகவின் வாக்குகள் யாருக்கு?

இந்த இடைத்தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் முன்பு பெற்ற வாக்குகள் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்தவையா? அல்லது அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் உழைப்புக்கும் அதில் பங்கு இருக்கிறதா?

இப்போது அவர்கள் தவெகவில் இருக்கும் நிலையில், அந்த வாக்குகள் யாருக்கு செல்கின்றன என்பது முக்கியமான கேள்வி. அதிமுகவின் வாக்குகளை எடப்பாடி பழனிசாமியால் தக்கவைக்க முடியுமா என்பதற்கான பதில் இந்தத் தேர்தலில் கிடைக்கலாம்.

வேட்பாளர் தேர்வில் கவனம்

இந்த 5 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் தேர்வு முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களை எதிர்கொள்ளக்கூடிய உள்ளூர் செல்வாக்கு கொண்டவர்களைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்கொள்ளும்போது செந்தில் பாலாஜியின் அரசியல் செல்வாக்கையும் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கும். விராலிமலையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரை எதிர்கொள்ளும் வேட்பாளர் யார் என்பதும் கவனிக்கப்படும். பெருந்துறை, அம்பாசமுத்திரத்திலும் வலுவான வேட்பாளர்கள் தேவை.

சில தொகுதிகளில் முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன் உள்ளிட்ட பெயர்கள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இறுதி முடிவு எடப்பாடி பழனிசாமியின் கையில்தான் உள்ளது.

சீனியர்களுக்கு என்ன பொறுப்பு?

வேட்பாளர் தேர்வுக்கு அடுத்தபடியாக, தேர்தல் பணிகளில் கட்சியின் மூத்த தலைவர்களை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார் என்பதும் முக்கியம்.

சி.வி. சண்முகம், வேலுமணி போன்ற தலைவர்களின் அனுபவத்தையும், மாவட்டச் செயலாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பலத்தையும் தேர்தல் பணிகளில் முழுமையாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து களப்பணியில் இறக்கினால் மட்டுமே தொகுதி அளவில் வாக்குகளைத் தக்கவைக்க முடியும்.

அதேபோல், விலைவாசி உயர்வு, விவசாயக் கடன், சட்டம் - ஒழுங்கு போன்ற மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தவெக அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைகளில் ஆளுங்கட்சி அளிக்கும் பதிலும் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெறும்.

எடப்பாடிக்கு நிஜ சோதனை

இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் இலக்காக இருக்கும். ஆனால், இந்தத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கும், அதிமுகவின் தேர்தல் பலத்துக்கும் ஒரு சோதனையாக அமையப்போகிறது.

குறிப்பாக, அதிமுகவில் வெற்றி பெற்று இப்போது தவெகவில் இணைந்துள்ள முன்னாள் எம்எல்ஏக்களை அவர்களது சொந்த தொகுதிகளிலேயே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்தத் தொகுதிகளில் அதிமுகவின் பழைய வாக்குகள் அப்படியே கிடைக்குமா? அல்லது முன்னாள் எம்எல்ஏக்களின் பின்னால் வாக்காளர்களும் செல்லப் போகிறார்களா? இந்த கேள்விகளுக்கான பதில்தான் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு வழிகாட்டும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+