பொங்கல் பண்டிகைக்கு 4 முழ வேஷ்டி.. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுக.. காரசார விவாதம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தரமான 4 முழ வேஷ்டி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 8 முழ வேஷ்டியை விட 4 முழ வேஷ்டி தரம் குறைவாக இருப்பதாக நெசவாளர்கள் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் போது ஏன் தரம் குறைந்த வேஷ்டிகளை அதிக ஊதியம் கொடுத்து வாங்க வேண்டும்.. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரமே சிதைந்துவிடும். எனவே இந்த திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்யுங்கள் என்று திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டசபையில் இன்று பொங்கல் பண்டிகைக்கு, 8 முழ வேஷ்டிக்கு பதில் இனி தரமான 4 முழு வேஷ்டியும், ஜருகை சேலையும் இலவசமாக வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

4 மாதம் தான் இருக்கிறது
அப்போது பேசிய ஆஸ்டின், "நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக நெசவாளர்கள் பயன்பெற்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி சேலைகள் வழங்குவதற்காக தமிழகத்தில் நாகர்கோவில் சரகம், திருசெங்கோடு, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 சரகங்களில் தான் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது.
8 முழ வேஷ்டிக்கு பதிலாக இனி 4 முழ வேஷ்டி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இப்போது இவர்கள் அறிவித்துள்ள 4 முழு வேஷ்டிகளை ஏற்கனவே இருக்கக்கூடிய தறிகளை உற்பத்தி செய்ய முடியாது. அதனுடைய அளவு வித்தியாசம் என்பதால் தறியை மாற்றம் செய்ய வேண்டும். எனவே அரசு இப்போது அறிவித்துள்ள வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் எப்படி உற்பத்தி செய்ய முடியும்.
தரம் குறைந்த வேஷ்டிகள் வாங்க என்ன காரணம்?
மக்கள் யாராவது கேட்டார்களா? 8 முழம் வேஷ்டி வேண்டாம்.. 4 முழம் வேஷ்டி வேண்டும் என்று.. கருத்து கேட்பு கூட்டம் நடத்துனீங்களா? எனவே 4 முழ வேஷ்டி, சேலைகள் அறிவிப்பு திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். எங்கள் ஆட்சியில் தரமான 8 முழ வேஷ்டி கொடுத்தாங்க.. ஆனால் இப்போது தரமில்லா 4 முழ வேஷ்டிகள் தரம் குறைந்தது மட்டுமின்றி விலையும் குறைவு தான் என சொல்கிறார்கள். எனவே தரம் குறைந்த வேஷ்டிகளை ஊதியம் அதிகம் கொடுத்து வாங்க என்ன காரணம்? நெசவாளர்களின் வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளிப் போடும் திட்டமாக உள்ளது எனவே இதனை தற்காலிகமாகவது ரத்து செய்யனும்" என்று கூறினார்.
அதிமுக எம்.எல்.ஏ கேள்வி
”ஏற்கனவே அரசு கொள்முதல் ஆணை தரும் என்ற நம்பிக்கையில் 2 லட்சம் சேலை, வேஷ்டிகள் திருத்தணி தொகுதியில் மட்டும் உற்பத்தி செய்து வைத்துள்ளனர். எனவே இப்போது உற்பத்தி செய்து வைத்திருக்கும் வேஷ்டி, சேலைகளையும் கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கனும். இதேபோன்று தமிழகம் முழுக்க உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் வேஷ்டி, சேலைகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கருணை உள்ளம் கொண்ட முதல்வர் விஜய் நெசவாளர்கள் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும் என கவனம் ஈர்க்கிறேன்" என்று கூறினார்.
அமைச்சர் விஜய் பாலாஜி பதில்
இதற்கு பதில் அளித்த கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர்
ம விஜய் பாலாஜி பதில் அளித்து கூறியதாவது:- "தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளில் அதிகமாக என்ன கோரிக்கை மனுக்கள் வந்தது என்றால், 12 வருஷமாக ஒரே போன்ற ரேஷன் வேஷ்டி சேலைகள் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்தது. எனவே இதை மாற்றி தர வேண்டும் என கோரிக்கைகள் வந்தது. இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, மக்களுக்கு எது பிடித்து இருக்கிறதோ அதனை தரமாக கொடுங்கள் என உத்தரவு போட்டார்.
இதன் பேரில் தான் துறை செயலாளர்கள், சரக அதிகாரிகள் வைத்து எல்லா மாவட்டத்திலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினோம். அதில் பெரும்பாலானா மக்கள் 4 முழ வேஷ்டிகள் தான் வேண்டும் என சொன்னார்கள். அதேபோல் அரசின் இந்த முடிவுக்கு நெசவாளர்கள் முழு வரவேற்பு தெரிவித்து இது எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறினர். இதை எல்லாம் வைத்து தான் தற்போது 4 முழ வேஷ்டி, ஜருகை வைத்த சேலை கொடுக்க இருக்கிறோம். அதே நேரத்தில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து வேஷ்டி, சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் தீர்மானிக்கட்டும்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொன்னாங்க.. எங்க ஆட்சியில் தரமான 8 முழ வேஷ்டி கொடுத்தாங்க.. இப்போது தரமில்லா 4 முழ வேஷ்டி கொடுப்பதாக சொல்கிறார்கள். நான் ஒன்று கூறுகிறேன். இந்த 4 முழ வேஷ்டிகளை எங்கள் கட்சி உறுப்பினர்கள் அடுத்த சட்டசபை கூட்டத்தொடருக்கு அணிந்து வருகிறோம். நீங்கள் கடந்த ஆட்சியில் கொடுத்த வேஷ்டிகளை அணிந்து வாருங்கள். எந்த வேஷ்டி தரமானதாக உள்ளது என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications
