Pongal: பொங்கல் பண்டிகைக்கு 4 முழம் வேட்டிதான்! அமைச்சர் விஜய் பாலாஜி திட்டவட்டம்! திமுக கண்டனம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு 4 முழ வேட்டிதான் வழங்கப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். இதை திமுக விமர்சித்து வருகிறது. 8 முழமாக கொடுக்கப்பட்டிந்தது தற்போது 4 முழமாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலை, நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை அமைச்சர் விஜய் பாலாஜி பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்தவர்கள், "குமரி மாவட்டத்தில் 32 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கடந்த 3 மாதங்களாக வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
அரசு தற்போது வரும் பொங்கலுக்கு 4 முழ வேட்டிகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள கைத்தறி மற்றும் பெடல் தறிகளில் இந்த புதிய மாற்றத்தை செய்ய ஒரு தறிக்கு ரூ 11 ஆயிரம் முதல் ரூ 14 ஆயிரம் வரை செலவாகும்.
சாதாரண நெசவாளர்களால் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய முடியாது. எனவே இந்த புதிய அறிவிப்பால் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என விஜய் பாலாஜியிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜய் பாலாஜி கூறுகையில், பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 4 முழ வேட்டிதான் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலர் விமர்சித்து வருகிறார்கள். அதில் காதர் என்பவர் தனது ட்வீட்டில், இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற கோரிக்கையை கேள்விப்பட்டதும் கிடையாது, செய்திகளில் பார்த்ததும் கிடையாது. நெசவாளர்கள் வயிற்றில் அடிக்கத் தயாராகிவிட்டது இந்த அரசு.
நெசவாளர்களுக்கான பொங்கல் பரிசு அறிவிப்பை இப்போதே வெளியிட்டுவிட்டார் அமைச்சர்.
8 முழ வேட்டி 4 முழமான மாற்றத்தைக் கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி சேலை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்த திட்டத்தை தொடர்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து கைத்தறித் துறை செயலர் தி.ந.வெங்கடேஷ் வெளியிட்ட அரசாணை விவரம்: பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க அரசு உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்தாண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நிகழாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்தபோது 2 கோடியே 27 லட்சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்சத்து 14,094 வேட்டிகளும் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், கடந்த 3 ஆண்டுகளைப் போலவே சுமார் 177.64 லட்சம் சேலைகள், 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக தேவைப்படும் வேட்டி, சேலைகள் பின்னர் உற்பத்தி செய்யப்படும்.
நடப்பாண்டில் கூடுதல் தரத்துடன் புதிய ரக நூலில் வேட்டிகள், சேலைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில் வண்ண பாலியஸ்டர் பார்டரும் இடம் பெறவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் மற்றும் உற்பத்தி மதிப்பீடு ரூ.642.88 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.606.94 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை அடுத்து விடுவிக்கப்படும்.
இத்திட்டத்தின் பலன்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குடும்ப அட்டை இல்லாத முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகள் ஆதார் அடிப்படையிலான கைவிரல் ரேகை மூலம் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட பிறகு வேட்டி, சேலை பெறலாம்.
2026 பொங்கல் திட்டத்தில் எஞ்சியுள்ள பழைய வேட்டி, சேலைகளை நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையின்போது முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
