2,000 கோயில்களில் ஒரு கால பூஜை மேற்கொள்ள ரூ.40 கோடி வைப்பு நிதி! காசோலை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தில் 2,000 கோயில்களில் ஒரு கால பூஜை மேற்கொள்ள ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் நிதி வசதி குறைவாக உள்ள திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு திருக்கோயில் பெயரிலும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஒரு கால பூஜை
இந்நிலையில் விலைவாசி உயர்வின் காரணமாக பூஜை செலவினத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையை ஈடுகட்டும் வகையில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், " 12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

12,959 திருக்கோயில்கள்
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக கடந்த 29.11.2021 அன்று வழங்கினார்.

ரூ.40 கோடிக்கு காசோலை
2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, "ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதி வசதி குறைவாக உள்ள 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதி குறைவாக உள்ள மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் இன்று 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications