குகேஷுக்கு 5 கோடியா? காசிமாவை கைவிட்டது ஏன்? சமூகநீதி எங்கே? பொங்கிய நெட்டிசன்ஸ்
சென்னை: தமிழக முதல்வர் செஸ் வீரர் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ள நிலையில், கேரம் வீரர் காசிமா உரிய முறையில் அரசு அங்கீகரிக்கவில்லை என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
செஸ் விளையாட்டு வீரர் குகேஷ் சிங்கப்பூரில் நடைபெற்ற 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்று சாதனைப் படைத்திருந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ளது. அவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சியை நம் மாநில மக்கள் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது. குகேஷ் தனது 18 ஆவது வயதில் 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது இதுவரை வரலாற்றில் நடக்காத ஒரு நிகழ்வு. குகேஷும் அதை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த வெற்றி பலரையும் அவர் யார்? அவரது குடும்ப பின்புலம் என்ன? என்பதைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதால் அவருக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஒரு நடுத்தர குடும்ப பின்னணியைக் கொண்டுள்ள இவர், இந்தளவு சாதித்துள்ளதை மறுக்க முடியாது. அவர் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சில மாதங்கள் முன்னதாகவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி அவர் சிங்கப்பூர் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றும் முன்கூட்டியே வாழ்த்தி இருந்தார்.
இப்போது அந்த வார்த்தையை குகேஷ் உண்மையாக்கி இருக்கிறார். இந்த வெற்றியை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் குகேஷுக்கு ரூ.கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சச்சின் டெண்டுல்கர் என பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் குகேஷுக்கு கிடைத்துள்ள கெளரவம் இதற்கு முன்னால் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார். இந்தச் சாதனையை அவர் 17 வயதில் நிகழ்த்திக் காட்டி இருந்தார். அப்படிப் பார்த்தால் குகேஷை விட ஒரு வயது இளையவர் இவர். ஆனால், குகேஷுக்கு கிடைத்த வெளிச்சமோ அல்லது ஊக்கத் தொகையோ இதுவரை இவருக்கு வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வடசென்னையைச் சேர்ந்த மக்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் காசிமாவுக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்திருந்தார். அவருக்கு எந்தத் தொகையையும் வழங்க உத்தரவிடவில்லை. அதை சுட்டிக்காட்டித்தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குகேஷுக்கு ஒரு நியாயம்? காசிமாவுக்கு ஒரு நியாயமா? என மனம் வருந்தக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற உடனேயே உதயநிதி ஸ்டாலின் ஒரு உத்தரவாதத்தை அளித்திருந்தார். விளையாட்டு வீரர்களுக்கு உரிய ஊக்கத்தொகை சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. அதனால் வீரர்கள் விளையாட்டுத் துறையில் ஊக்கத்துடன் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. அந்தக் குறை உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்கு விருது பெற்ற வீரருக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறி அரசாணையை வெளியிட வைத்தார்.

ஆனால், அப்படியான ஒரு ஆணை இருந்தும் காசிமாவுக்கான கவுரவம் கிடைத்ததைப் போல் தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காகக் கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1.50 லட்சம் நிதியுதவி அளித்தார். அதன்பின்னர் World Beach Volleyball Pro Chennai Challenge 2024 மாமல்லபுரத்தில் தொடங்கி வைத்த போது காசிமாவை சந்தித்து வாழ்த்தினார். ஆனால், அவருக்கு குகேஷுக்கு அறிவிக்கப்பட்டதைப் போலப் பரிசுத் தொகை இதுவரை அரசு அறிவிக்கவில்லை என்பது சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கையாக இருக்கிறது.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகள் தான் காசிமா. அவரை குகேஷ் அளவுக்குக் கெளரவம் செய்வதன் மூலம் விளையாட்டுத்துறையிலும் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று தனியே சொல்லவேண்டியது இல்லை.












Click it and Unblock the Notifications