ஒரே இணையதளம்.. 5 சேவைகள்.. கிராம நத்தம், பட்டா, பத்திரப்பதிவு, எல்லாமே ஓரிடத்தில்.. வாவ் தமிழக அரசு
சென்னை: பத்திரப்பதிவு , மின் இணைப்பு, குடிநீர் வரி, சொத்துவரி போன்ற சேவைகளை எளிமைப்படுத்த தமிழக அரசு புதிய வசதியை செய்து தர போகிறது.. பொதுமக்களின் நன்மையை கருத்தில்கொண்டு, புதிய முயற்சியில் அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகளும் இப்போது ஆன்லைன் மயமாகிவிட்டன.

பதிவுத்துறை: இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை, புரோக்கர்களுக்கும் இதில் சிறிதும் இடம் கிடையாது.. யாருக்கும் எந்த கமிஷன் பணமும் தர வேண்டிய அவசியமுமில்லை. லஞ்சம் தந்து சான்றிதழ்களை பெற வேண்டிய தேவையுமில்லை.. எதுவானாலும் அனைத்தையுமே ஆன்லைன் மூலமே செய்து கொள்ள முடியும். அந்தவகையில்தான், பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றம் போன்றவைகளும் ஆன்லைன் மூலமே நடந்து வருகின்றன..
விண்ணப்பங்கள்: எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.. சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டமும் இதை முன்னிறுத்தியே துவங்கப்பட்டுள்ளது.
எனினும், இப்படி தனித்தனியாக சேவைகள் இல்லாமல், அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின்: காரணம், அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் - அதிகாரிகள் இடையே மூன்றாம் நபர் தலையீடு இருக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. இதை மையமாக வைத்துதான், அடுத்தக்கட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன..
உதாரணத்துக்கு, https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம்.
தலையீடு அதிகம்: ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல், 3-ம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து பெறுகின்றனர். இதில், தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் மொத்தமாக சேர்த்து வழங்க 'ஒருங்கிணைந்த நில சேவை இணையதளம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் குறித்து, அதற்கென உள்ள இணையதளத்திலும், பத்திரப்பதிவு தொடர்பாக அதற்கென உள்ள இணையதளத்திலும், பட்டா சேவைகள் பெற அதற்கென உள்ள இணையதளத்திலும், நிலம் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் கண்டறிய அதற்கென உள்ள இணையதளத்திலும், சொத்து வரி, குடிநீர் வரி அறிந்துகொள்ள அதற்கென உள்ள இணையதளத்திலும்., மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதளமாக தேடி தேடிச்சென்று பார்க்க வேண்டியிருக்கிறது.
இணையதள வடிவமைப்பு: மேற்கண்ட அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை தமிழக அரசு வடிவமைத்திருக்கிறதாம்.
இந்த ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா-சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திரப்பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட்டு மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து-குடிநீர் வரி விவரங்கள் என் மொத்தமாக நாம் பார்த்து கொள்ளலாம்.
எளிய சேவைகள்: முழுக்க முழுக்க தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெப்சைட், விரைவில் செயல்பாட்டுக்கு வரப்போகிறதாம். எப்படியும் 2 மாதத்திற்குள் முபமையான செயல்பாட்டுக்கு இந்த வெப்சைட் வந்துவிட்டால், அனைத்து சேவைகளுமே பொதுமக்களுக்கு எளிதாகிவிடும்.. சேவைகளின் தேவைகளும் பெருகிவிடும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தற்போது நத்தம் பட்டா விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும்நிலையில், தமிழ் நிலம் தொகுப்பில், இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை அரசு துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.. எனினும் விரைவில், பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் நிலையில், மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications