பாஜக மைதிலி! அதிமுக ஆறுக்குட்டி! திமுகவில் இணைந்த தலைகள்! மேடையிலேயே செந்தில் பாலாஜி சொன்ன"டார்கெட்"
சென்னை: பாஜகவை சேர்ந்த மைதிலி வினோ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர்.
பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
இந்த நிகழ்வில் 55 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மைதிலி
பாஜக மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி வினோ இன்று திமுகவில் இணைந்தார். 1999ல் இருந்து பாஜகவில் உறுப்பினராக இருந்தவர் மைதிலி வினோ. இவர் நேற்று முதல்நாள் செந்தில் பாலாஜியுடன் ஆலோசனை செய்ததாகவும், திமுகவில் இணைய போவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கட்சி விதிகளை மீறியதாக நேற்று பாஜகவில் இருந்து மைதிலி வினோ நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று மைதிலி வினோ திமுகவில் இணைந்தார்.

தினகரன்
பாஜகவில் காசு இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி.. அங்கே உழைப்பவர்களுக்கு பதவி இல்லை என்று கூறி மைதிலி வினோ திமுகவில் இணைந்துள்ளார். அதேபோல் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன் திமுகவில் இணைந்தார். 2011ல் சூலூர் எம்எல்ஏவாக தேமுதிக சார்பாக வென்றவர் தினகரன். இவருடன் தேமுதிக நகர செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர். நாங்கள் பாரம்பரிய திமுக குடும்பம். அதனால் திமுகவில் இணைக்கிறேன் என்று கூறினார்.

ஆறுக்குட்டி
அதேபோல் கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் வென்று இவர் எம்எல்ஏ ஆனார். இரண்டு முறையும் ஜெயலலிதா மூலம் நேரடியாக இவர் தேர்வு செய்யப்பட்டவர். அதன்பின் அதிமுக உடைந்த போது ஓபிஎஸ் ஆதரவாளர் ஆனார். பின்னர் ஓபிஎஸ் மீதும் இவர் அதிருப்தி அடைய.. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி
இன்று மேடையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் இணையும் மாற்று கட்சி நிர்வாகிகளை வரவேற்கிறேன். திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்து கொண்ட முன்னாள் பாஜக உறுப்பினர் மைதிலி வினோவை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்த முன்னாள் தேமுதிக எம்எல்ஏ தினகரனுக்கு நன்றி. உங்களின் வரவு திமுகவிற்கு பலம் சேர்க்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 39லும் வெற்றிபெறுவோம். இங்கு உள்ள 55 ஆயிரம் பேரும் தலைக்கு தலா 10 வாக்குகளை நம் பக்கம் கொண்டு வர வேண்டும். இதை டார்கெட்டாக வைத்து செயல்பட வேண்டும்., என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications