மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியது திமுக... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக சம்மதம்!
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ கையெழுத்திட்டனர்.
மதிமுக 12 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில் திமுக 6 தொகுதிகள் கொடுத்துள்ளது.திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது.
திமுக காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு நடத்தி வருகிறது. இதுவும் சுமுகமாக முடியும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் கூறின.

பேச்சுவார்த்தை இழுபறி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காங்கிரஸ் அதிருப்தி
திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், மாமாவுக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. ஆனால் மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் இரு கட்சிகலும் அதிருப்தி நிலையிலே இருந்து வந்தன.

மதிமுகவுக்கு 6 தொகுதிகள்
இந்த நிலையில் மதிமுகவுடன், திமுக விறுவிறுப்பாக பேச்சு நடத்தி வந்தது. மதிமுக 12 தொகுதிகள் கேட்டது. திமுக 6 தொகுதிகள் தருவதாக கூறியதால் இழுபறியுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இந்த 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

உதயசூரியன் சின்னத்துக்கு சம்மதம்
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த 6 தொகுதிகள் என்னென்ன? இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக அறிவித்துள்ளது. திமுக காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு நடத்தி வருகிறது. இதுவும் சுமுகமாக முடியும் பட்சத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications