அடேங்கப்பா.. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலத்தை திறந்த மோடி! மாஸ் காட்டும் மதுரை - இத்தனை சிறப்புகளா?
சென்னை: மதுரை - நத்தம் இடையில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிறாக திறந்துவிட்டு உள்ளார். இந்த மேம்பாலத்தை கட்டமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? இதன் சிறப்புகள் மற்றும் இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் பெருகி வரும் வாகனங்களின் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரை தல்லாக்குளம் ஐ.ஓ.சி அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரையிலான 35 கி.மீ தூர சாலை ரூ.1,028 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

பறக்கும் மேம்பாலம்: கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மதுரை தல்லகுளத்தில் இருந்து ஊமச்சிகுளத்தில் உள்ள மாரணிவிலக்கு பகுதி வரை பறக்கும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.612 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த பறக்கும் மேம்பாலத்துக்கு வலுவான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, 150 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் மேம்பாலத்தை தாங்கிப் பிடிக்கும் வகையில் 268 ராட்சத தூண்கள் கட்டப்பட்டன. நவீன முறையில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கான்கிரீட் கார்டர்கள் பொறுத்தப்பட்டன.

சிறப்புகள்: அதேபோல் இந்த பாலத்திற்கு கீழ் இருக்கும் ஒவ்வொரு தூணையும் சுற்றி 4 திசைகளிலும் சிறிய எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு உள்ளன. 2 தூண்களுக்கும் இடையே எல்.இ.டி விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. திருப்பாலை, ஊமச்சிகுளம், அய்யர் பங்களா பகுதிகளில் பூங்காக்கள், விவசாயி சிலை, நடைபயிற்சி மேடைகள் அமைக்கப்பட்டு சிறுவர்களை கவரும் ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன.
7.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மேம்பாலம்தான் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான வாகன போக்குவரத்துக்கு பயன்படும் மேம்பாலம் என்ற பெருமையை பெற்று உள்ளது. பாலத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதை தொடர்ந்து இன்று பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பயண தூரம்: மதுரை - நத்தம் இடையிலான இந்த 4 வழிச்சாலையை தொடர்ந்து திருச்சி - துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இவை பயன்பாட்டுக்கு வந்து இந்த மேம்பாலம் வழியே சென்றால் திருச்சி - மதுரை இடையிலான பயண தூரம் 24 கிலோ மீட்டர் தூரம் குறையும் என்றும், இதன் மூலம் மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்வோருக்கான பயண தூரமும் குறையும் என்றும் நம்பப்படுகிறது.
இது அல்லாமல் திருச்சியுடன் திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் சிட்டம்பட்டி - வாடிப்பட்டி இடையே 4 வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் மதுரை மக்கள் போக்குவரத்துக்காக அந்த சாலையை அதிகளவில் பயன்படுத்துவதன் இதன் மூலம் திண்டுக்கல் மதுரை இடையேயான பயண தூரமும் குறையும்.












Click it and Unblock the Notifications