7 குதிரை படத்தை சுவற்றில் மாட்டி வைக்கிறீங்களா? வாஸ்து தாண்டி இதற்கும் ஒரு காரணம் இருக்கு
சென்னை: 7 குதிரைகள் வேகமாக ஓடுவது போன்ற ஒரு படம், வீட்டுக்குள் நுழைந்ததும் சுவற்றில் இருக்கும். ஹாலில் மட்டுமல்ல.. சில அலுவலகங்களிலும் இந்த படத்தை மாட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். இதை ஏன் வைக்கிறார்கள் என்று கேட்டால், பலரும் உடனே "வாஸ்துக்காகத்தான்" என்பார்கள். ஆனால் அதுமட்டுமே காரணம் கிடையாது.. வேறு சில சமாச்சாரங்களும் உள்ளன. இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
உண்மையில் குதிரை என்றாலே, வேகம், தைரியம், சுறுசுறுப்பு, முன்னேற்றம் என்ற எண்ணம் நமக்கு வருகிறது. குதிரை ஓடும்போது அதை பார்த்தாலே ஒரு வேகம் நமக்குள்ளும் வருவது போல இருக்கும். அதனால்தான் வாழ்க்கையிலும் ஒரு இடத்தில் நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதற்கான அடையாளமாக குதிரையை பலரும் பார்க்கிறார்கள்.

7 குதிரைகள் ஏன்
அதிலும் 7 குதிரைகள் ஏன் என்று கேட்டால், அதுக்கம் நம்முடைய பழைய நம்பிக்கைகளில் ஒரு காரணம் இருக்கிறது... சூரிய பகவானின் தேரை 7 குதிரைகள் இழுப்பதாக இந்து மரபில் சொல்லப்படுகிறது. சூரியன் என்றாலே ஒளி, சக்தி, புத்துணர்ச்சி. இதனால் 7 குதிரைகள் ஓடும் படம் வீட்டில் இருந்தால் நேர்மறையான சக்தி, வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவை வரும் என்று நம்புகிறார்கள்.
வாஸ்து நம்பிக்கையிலும் இந்த படத்துக்கு முக்கியத்துவம், கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. வீட்டில் ஓடும் குதிரைகள் இருக்கும் படம் வைத்தால் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும், வேலை மற்றும் பிசினஸில் முன்னேற்றம் கிடைக்கும், தடைப்பட்ட விஷயங்கள் வேகமாக நடக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.
வாஸ்துவைத் தாண்டி காரணம்?
ஆனால் வாஸ்துவைத் தாண்டி பார்த்தாலும் இந்த படத்துக்கு ஒரு சுவாரஸ்யமான அர்த்தம் இருக்கிறது. தினமும் வீட்டில் ஓடும் குதிரைகளை பார்க்கும்போது, "நாமும் சும்மா இருக்கக்கூடாது.. ஏதாவது செய்ய வேண்டும்.. முன்னேற வேண்டும்" என்ற எண்ணம் ஏற்படுமாம்.. இது ஒரு வகையில் நமக்கு பூஸ்ட் கொடுக்கும் படமாகவும் இருக்கிறது.
அதேபோல, குதிரை பல காலமாகவே உழைப்பு, வேகம், வெற்றி போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது... ஒரு இலக்கை நோக்கி ஓடுவது போல இருக்கும் குதிரைகளின் படம்,.. நம்முடைய இலக்கை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும் என்று கருதலாம்.
பாசிட்டிவ் எனர்ஜி
அதேசமயம், இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் மறந்துவிடக்கூடாது... 7 குதிரை படத்தை வீட்டில் மாட்டி வைத்தால் பணம் தானாக பெருகும், செல்வம் கொட்டும், அதிர்ஷ்டம் உறுதியாக வரும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது... இது முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமே.
அதனால் 7 குதிரை படத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் அதை வெறும் வாஸ்து பொருளாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை.. ஓடும் குதிரையைப் போல வாழ்க்கையிலும் நாமும் முன்னோக்கி ஓட வேண்டும்.. நின்றுவிடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தும் ஒரு அழகான சின்னமாக, பாசிட்டிவ் எனர்ஜியாக பார்க்கலாம்...!!!


Click it and Unblock the Notifications
