“அத்துக்கூலிக்கு வேலை.. இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?” - சிபிஎம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவிலியர் படிப்புக்காகாக 7 புதிய கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த கல்லூரிகளில் உருவாக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் காண்ட்ராக்ட் அடிப்படையிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் B.Sc (Nursing) படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

CPIM attacks TVK government

இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.

அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் 11.09.2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அத்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.

எனவே மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருக்கிறார்.

என்னதான் தவெக ஆட்சி அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) ஆதரவு கொடுத்திருந்தாலும், தங்கள் கொள்கைக்கு எதிரான திட்டங்கள் கொண்டுவரப்படும்போது அதை சிபிஎம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தவெக ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+