சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி.. பயிற்சியாளர்கள் அஜாக்கிரதை?
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது 7 வயது மகன் தேஜா குப்தா. தேஜாவுக்கு 7 வயதாகிறது.
கோடை விடுமுறையையொட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் அருகே உள்ள பெரியமேடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொடுப்பதை தேஜஸ் குப்தா அறிந்தார்.

இதனால் தானும் நீச்சல் கற்றுக் கொள்வதாக பெற்றோரிடம் விருப்பத்தை கூறியுள்ளார். இதையடுத்து அந்த நீச்சல் குளத்தில் சிறுவன் கடந்த 10 நாட்களாக பயிற்சி பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் காலை 8 மணி அளவில் தனது தாத்தாவுடன் நீச்சல் பயிற்சிக்காக சென்றுள்ளார். அந்த நீச்சல் குளத்தை சுற்றி பூங்கா இருக்கிறது.
வழக்கமாக தேஜஸ் நீச்சல் பயிலும் வரை அவருடைய தாத்தா அந்த பூங்காவில் அமர்ந்திருப்பார். இந்த நிலையில் சிறுவன் திடீரென நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகியோர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு பிறருக்கு மரணத்தை விளைவித்தல் எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீச்சல் குளத்தில் பெற்றோருக்கு அனுமதி இல்லாததால் அவர்கள் வெளியே உள்ள பூங்காவில் அமர வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால்தான் சிறுவன் உயிரிழந்தான் என தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து சிறுவனின் தாத்தா கூறுகையில் தேஜஸ் நான் பார்க்கும் போது தண்ணீரில் நண்பர்களுடன் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் பயிற்சியாளர் எல்லாரையும் மேலே வருமாறு அழைத்தனர். எல்லாரும் வந்தனர். ஆனால் எனது பேரன் மட்டும் வரவில்லை. இதனால் நான் பயிற்சியாளரிடம் கேட்ட போது பாத்ரூம் போயிருப்பதாக சொன்னார். உடனே நான் பாத்ரூம் சென்று பார்த்தேன். அங்கே தேஜஸ் இல்லை. திரும்பி வந்து சொன்னேன். அவர்கள் பெண்கள் கழிவறைக்கு போய் பார்க்குமாறு கூறினார்கள்.
அதன்பேரில் நானும் அங்கு சென்று கதவை தட்டி பார்த்தேன். அங்கும் அவன் இல்லை. திரும்பி வந்து சொன்ன போது பயிற்சியாளர்கள், ஒரு வேளை வெளியே போயிருப்பான் என பொறுப்பில்லாமல் சொன்னார்கள். அதற்கு நான் , இல்லை சார் அவன் மரியாதை தெரிந்த பையன் உங்களிடமோ என்னிடமோ சொல்லாமல் வெளியே போக மாட்டான் என்றேன். உடனே வேறு ஒரு பயிற்சியாளர் வந்து உங்கள் பேரன் கிடைத்துவிட்டான் என்றனர்.
உடனே போய் பார்த்தால் நீரில் கிடந்தான். அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அந்த இடத்தில் நிறைய குழந்தைகள் வருகிறார்கள். கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து புதிதாக கற்றுக் கொள்ளும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்றார். தேஜஸின் உடலை பார்த்து தாத்தா கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்க செய்தது.












Click it and Unblock the Notifications