8வது ஊதியக்குழு.. பென்ஷன் 50% உயருமா? மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வந்த முக்கிய தகவல்
சென்னை: 8வது ஊதியக்குழு வந்துவிட்டதே.. அப்போ சம்பளம், பென்ஷன் எவ்வளவு கூடும்? என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் 50 சதவீதம் வரை அதிகரிக்குமா என்ற பேச்சு கவனம் பெற்றுள்ளது. ஆனால் இங்கேதான் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
8வது மத்திய ஊதியக்குழு என்ன செய்கிறது என்பதை முதலில் பார்ப்போம். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் சம்பளம், பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த விஷயங்களில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்காக இந்த ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2025 நவம்பர் 3-ம் தேதி இதை அமைத்தது.

8வது ஊதியக்குழு
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. பேராசிரியர் புலக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும் உள்ளனர். ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுவது Fitment Factor பற்றித்தான். அதாவது, ஒருவருடைய இப்போதைய அடிப்படை சம்பளத்தை வைத்து, புதிய ஊதியக்குழுவில் அவருக்கு எவ்வளவு அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கணக்குதான் இது.
ஓய்வூதியர் அமைப்புகள்
7வது ஊதியக்குழுவில் 2.57 என்ற Fitment Factor பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது இதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்று ஊழியர் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. சில அமைப்புகள் 3.61, 3.83, 4.00 போன்ற காரணிகளை முன்வைத்துள்ளன.
அதனால்தான், இனி சம்பளம் 50 சதவீதம் உயரும், சம்பளம் டபுளாகிவிடும் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை அரசு அல்லது 8வது ஊதியக்குழு எந்த Fitment Factor-ஐயும் இறுதி செய்து அறிவிக்கவில்லை. அதனால் இப்போது ஒரு குறிப்பிட்ட சதவீத சம்பள உயர்வு உறுதி என்று சொல்ல முடியாது.
உதாரணமாக, ஒருவரின் அடிப்படை சம்பளத்துக்கு 2.57 என்ற காரணியைப் பயன்படுத்தினால் ஒரு தொகையும், 3.83 என்ற காரணியை பயன்படுத்தினால் வேறு தொகையும் வரும். ஆனால் இவை வெறும் புரிதலுக்கான கணக்குகள் மட்டுமே. அவற்றை புதிய சம்பளம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
குடும்ப ஓய்வூதியம்
இதேபோலத்தான் ஓய்வூதியர்களின் விஷயமும். பென்ஷன் திருத்தம், குடும்ப ஓய்வூதியம், ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2026 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களையும் புதிய பென்ஷன் திருத்தத்தில் தெளிவாக சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதியர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்காக 8வது ஊதியக்குழுவின் Terms of Reference-ல் தெளிவான மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Fitment Factor, பென்ஷன் உயர்வு
சென்னையில் நடைபெற்ற ஆலோசனைகளிலும் ஓய்வூதியர் அமைப்புகள் குறைந்தபட்ச சம்பளம், Fitment Factor, பென்ஷன் உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளன... ஒரு ஓய்வூதியர் அமைப்பு 3.83 Fitment Factor மற்றும் 69,000 ரூபாய் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ஆனால் இவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் வைத்துள்ள கோரிக்கைகள். அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்ட தொகைகள் கிடையாது..
அதிலும் பென்ஷன் 50 சதவீதம் அதிகரிக்கும் என்ற தகவலை கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டும். 50 சதவீதம் என்பது அடிப்படை சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை வைத்து பென்ஷன் நிர்ணயிப்பதா? அல்லது ஒருவர் இப்போது வாங்கும் பென்ஷனில் மேலும் 50 சதவீதம் கிடைக்குமா? இந்த இரண்டும் ஒன்றல்ல.
மத்திய அரசு முடிவு என்ன
எனவே, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கும் பென்ஷன் 50 சதவீதம் உயர்கிறது என்று இப்போதே உறுதியாக சொல்ல முடியாது. 8வது ஊதியக்குழு தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும். அதன் பிறகு மத்திய அரசு அதை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையில் சம்பளம், பென்ஷன் எவ்வளவு மாறும் என்பது தெளிவாகும்.
இப்போதைக்கு ஓய்வூதியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுதான்.. 50% உயர்வு என்ற பேச்சு இருக்கிறது; ஆனால் அது இன்னும் அரசு அறிவித்த முடிவு இல்லை..!!!


Click it and Unblock the Notifications
