ரயில்வேக்கு கொட்டி கொடுக்கும் தமிழ்நாடு.. அதிக வருவாய் வழங்கும் ஸ்டேஷன்கள்.. எதெல்லாம் பாருங்க
சென்னை: தெற்கு ரயில்வேக்கு 2023 - 24 நிதி ஆண்டில் கிடைத்த வருவாயின் விவரம் வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே மூலமாக ஒட்டுமொத்தமாக ரூ.12,020 கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைத்துள்ளது. எந்தெந்த ரயில் நிலையங்களில் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய ரயில்வே துறைக்கு கணிசமான வருவாய் தெற்கு ரயில்வே மூலமாக கிடைக்கிறது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை ஆறு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்களாக தெற்கு ரயில்வே உள்ளது.

ரயில்வே வருவாய்: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தெற்கு ரயில்வேயின் சேவை உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களின் சில பகுதிகளும் தெற்கு ரயில்வேயின் மண்டலத்திற்குள் அடங்கும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் தெற்கு ரயில்வே மூலமாக பயணிக்கிறார்கள். பிற மண்டலங்களைப் போல் இல்லாமல் தெற்கு ரயில்வேக்கு பயணிகளின் கட்டணம் மூலமே பெருமளவு வருவாய் கிடைக்கிறது.
முதல் 3 இடங்கள் தமிழகம்: இந்த நிலையில் தான் தெற்கு ரயில்வேக்கு 2023-24 நிதி ஆண்டில் கிடைத்த வருவாயின் விவரம் வெளியாகியுள்ளது. எந்தெந்த ரயில் நிலயங்களில் எவ்வளவு கிடைத்தது என்பது குறித்த விவரங்களுடன் தெற்கு ரயில்வே ஆண்டு வருவாய் விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி, அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் முதல் 3 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ரயில் நிலையங்களே பெற்றுள்ளன.
சென்னை, கோவை: சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.1,215.79 கோடி ரூபாய் ஆகும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.564.17 கோடியாகவும், கோவை ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.324.99 கோடியாக உள்ளது. முதல் இடங்களில் இந்த ரயில் நிலையங்கள் அடுத்தடுத்து உள்ளன. பட்டியலில் நான்காவது இடத்தில் திருவனந்தபுரம் ரயில் நிலையம் உள்ளது.
7வது இடத்தில் மதுரை: கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.262 கோடியாக உள்ளது. 5-வது இடத்தில் தாம்பரம் ரயில் உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.233 கோடியாகும். 6-வது இடத்தில் எர்ணாகுளம் (227 கோடி) , 7-வது இடத்தில் மதுரை (ரூ.208 கோடி), 8-வது இடத்தில் கோழிக்கோடு (178 கோடி ரூபாய்), 9-வது இடத்தில் திரிச்சூர் (ரூ.155 கோடி), 10-வது இடத்தில் திருச்சி ரயில் நிலையம் (ரூ.155 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது.
மொத்த வருவாய் எவ்வளவு?: ஒட்டுமொத்தமாக தெற்கு ரயில்வே மூலமாக ரூ.12,020 கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைத்துள்ளது. இதில் பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் என்பது ரூ.7,151 கோடியாகும். சரக்கு கட்டணம் மூலமாக ரூ.3,674 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பண்டிகை காலங்களுக்கு சிறப்பு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்டவை மூலமாக தெற்கு ரயில்வேயின் வருவாய் கணிசமாக உயர்ந்து இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications