தொய்வில்லா போராளி... தோழர் நல்லகண்ணுவுக்கு 95-வது பிறந்தநாள்... ஸ்டாலின் நேரில் வாழ்த்து
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 95-வது பிறந்தநாளை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், பொதுவுடைமைவாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக நல்லகண்ணு திகழ்கிறார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
உண்மையாகவும், கம்பீரமாகவும், எளிமையாகவும், வாழும் நல்லகண்ணு தொய்வில்லாப் போராளி எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

மூத்த தலைவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணுவுக்கு இன்று 95-வது பிறந்தநாள். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நல்லகண்ணு பிறந்தநாள் விழா இன்று எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.

புகழாரம்
நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை தொய்வில்லா போராளி என்றும், தியாகத்தின் திருவுருவம் எனவும் போற்றி புகழாரம் சூடினார். அவருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பியும் உடன் சென்றார்.

பங்கேற்பு
நல்லகண்ணு பிறந்தநாள் மற்றும் தோழர் கே.டி.கே. தங்கமணி நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் உடல் நலம் குன்றிய நிலையிலும் தா.பாண்டியன் பங்கேற்றார். அவர் கடந்த ஒரு வாரமாக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு பள்ளிப்பருவம் முதலே பொதுவுடைமை சித்தாந்தத்தில் பற்றுள்ளவராக திகழ்ந்தார். 1943-ம் ஆண்டு தனது 18-ம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட நல்லகண்ணு 95 வது வயதிலும் கொள்கை குன்றாக திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications