திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்திக்கு பெரிய சிக்கல்.. வேகமாக பரவும் பழைய வீடியோ
சென்னை: திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சூர்யமூர்த்திக்கு எதிராக பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சில திமுக ஆதரவாளர்களே அவருக்கு எதிராக இணையத்தில் பெரிய அளவில் குற்றச்சாட்டுகளை கூறி, அவரது பழைய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது.வேட்புமனுதாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27 ம் தேதி நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவும், பாஜக பாமக அமமுக கூட்டணி ஒரு அணியாகவும் இருக்கின்றன.

தமிழ்நாடு புதுச்சேரியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்திலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஈஸ்வரன் அறிவித்துள்ளார். இதனிடையே கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தி நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக திமுக ஆதரவாளர்களே போர்க்கொடி உயர்த்தி ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில், சாதி ரீதியான கருத்துடன், மிக கடுமையாக பேசிய சூர்ய மூர்த்தியை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சமூக நீதி பேசும் ஜாதி ஒழிப்பு பேசி விட்டு இந்தியா கூட்டனியிலிருந்து இது போன்றவரை ஒரு வேட்பாளராக போடுவது நியாயமே இல்லை என்றும், இந்த நபர் எப்படி மற்ற சமூக மக்கள் சிக்கலை தீர்ப்பார் ?? திமுக தலையிட்டு இந்த வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று குமுறுகிறார்கள்..இந்த பதிவும், சூர்ய மூர்த்தி பேசிய பழைய வீடியோவும் தற்போது வேகமாக பரவி வருகிறது..












Click it and Unblock the Notifications