கருணை அடிப்படையில் அரசு வேலைக்கு செக்.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு, போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் குடும்பத்தினர், மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர், சத்துணவு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் என, பல்வேறு அரசு துறை மற்றும் அரசு பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் அரசு வேலையில் சிறப்பு வாய்ப்பு உள்ளது. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தகுதியான குடும்பங்களுககு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு துறைகள் மற்றும் போக்குவரத்து, மின்வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியின் போது காலமானால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குகிறது தமிழக அரசு. இதற்காக சிறப்பு சட்டம் அமலில் இருக்கிறது. இதன்படி, மனைவி, கணவன், மகன், மகள் அல்லது மருமகன் ஆகியோருக்கு அரசு வேலை வழங்கப்படுகிறது. இதற்கு 3 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அரசு ஊழியர் மரணமடைந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர், "கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது சலுகைதானே தவிர, அரசியல் சாசன நியமனத் திட்டம் அல்ல. கருணை அடிப்படையில் பணி கேட்பது உரிமையாக கோர முடியாது.
அரசு பணி நியமனங்கள் அனைத்தும், அரசியல் சாசன விதிகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த தகுதியும் பார்க்காமல், இடஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்கப்படுவது அரசியல் சாசன பிரிவுகளுக்கு முற்றிலும் விரோதமானவை ஆகும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதன் மூலம் திறமையற்ற அரசு நிர்வாகம் உருவாகும் நிலைக்கு வழிவகுக்கும். எனவே, இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வு செய்து தகுதியான குடும்பங்களுக்கு மட்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
சலுகை நியமனங்கள் பின்தங்கிய பிரிவினர் வேலைவாய்ப்பு பெறும் சந்தர்ப்பத்தை பாதிக்கிறது. அரசு ஊழியர் மரணமடைந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
