சென்னை கண்ணகி நகரில் 4 ஆவதாகவும் பிறந்த பெண் குழந்தை.. எந்த தாய், தந்தையும் செய்யக்கூடாத காரியம்
சென்னை: சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த ஸ்ரீஜி வினிஷா தம்பதி தங்களது பெண் குழந்தையை ரூ.2.20 லட்சத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. வறுமை காரணமாக 3 மாதமே ஆன பெண் குழந்தையை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி வாங்கியுள்ளனர். குழந்தை விற்பனை செய்த விவகாரம் குழந்தை நல அலுவலருக்கு தெரியவந்தது. இதையடுத்து தாய்-தந்தை உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த 27 வயதாகும் ஸ்ரீஜி பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வினிஷாவுக்கு 23 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருக்கின்றன. கடந்த மே மாதம் 4-வதாக வினிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்த ஸ்ரீஜி-வினிதா தம்பதியினர், 3 மாதமே ஆன அந்த பெண் குழந்தையை விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

தனது தோழி சிவரஞ்சனி (22) என்பவரிடம் குழந்தையை விற்று தரும்படி மாமியார் சரளா(45) உடன் சேர்ந்து வினிஷா கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவரஞ்சனி, தனது மாமியாரான தூய்மை பணியாளர் சகாய மேரி (39) என்பவரிடம் விவரத்தை கூறினாராம். அவர், தனது தோழியான சுமதி (35) என்பவரிடம் அணுகுமாறு கூறினாராம்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த ஒரு தம்பதிக்கு அந்த பெண் குழந்தையை விற்க சுமதி ஏற்பாடு செய்தாராம். இதற்காக ரூ.2.20 லட்சம் ஸ்ரீஜி-வினிஷா தம்பதிக்கு தரப்பட்டிருக்கிறது. இதில் சிவரஞ்சினிக்கு ரூ.15 ஆயிரம், சகாய மேரிக்கு ரூ.5 ஆயிரம், சரளாவுக்கு ரூ.50 ஆயிரம் என அந்த தம்பதி கொடுத்தார்களாம். குழந்தையை ஜூலை மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதியிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
அதேநேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வாரம் ஒரு முறை திருவண்ணாமலை தம்பதி குழந்தையை கண்ணகி நகருக்கு கொண்டு வந்தனர். அப்போது குழந்தையை விற்ற தகவல் ரகசியமாக குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிந்தது. இது தொடர்பாக கண்ணகி நகர் போலீசாரிடம் குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்தார். இதையடுத்து கண்ணகி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் குழந்தையின் பெற்றோர், வாங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவியவர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் குழந்தையின் தந்தை ஸ்ரீஜி, அவரது மனைவி வினிஷா, மாமியார் சரளா, சிவரஞ்சனி, சகாயமேரி, சுமதி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். விற்கப்பட்ட 6 மாத பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கண்ணகி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications