கொட்டப்போகும் மழை.. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வெயில் முற்றிலுமாக குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும் கூட பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று காலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் முக்கிய அப்டேட் தரப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கு-மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் கடல் மட்டத்திலிருந்து 3.1 முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் மேல் காற்று சுழற்சி தற்போது நீடித்தது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று மாறியது. அதன்பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் அதே பகுதியில் குறைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் ஜூலை 28 ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடற்கரை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று முதல் வரும் 28 ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த வேளையில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக கிழக்கு இந்தியா பகுதிகள், கடலோர பகுதிகளான ஒடிசா, ஆந்திரா மற்றும் அதனையொட்டி பகுதிகளில் மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் கடல் சீற்றமாக இருக்கும். இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க மாநிலம் மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் முழுவதும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் கடலோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications