பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பா? சரக்கு ரயிலில் உக்கிரம் அடையும் தீ.. ஸ்பாட்டுக்கு ஓடிவந்த ஆட்சியர்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த ஆட்சியர் பிரதாப், மொத்தமாக உள்ள 52 பெட்டிகளில் 47 பெட்டிகளை கழற்றி தனியாக பிரித்துவிட்டதாகவும், தீயை அணைக்க தண்ணீருக்கு பதிலாக ஃபோம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூரில் இருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு 52 டேங்கர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் திடீரென தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தீ அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் நலன் கருதி அவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டேங்கர் ரயில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஸ்பாட்டுக்கு விரைந்துள்ளார். இதன்பின் தீ விபத்தை பார்வையிட்ட அவர் உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்தது.
இதன் காரணமாக தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமான விஷயமென்றால் தீ பரவாமல் இருக்க, 4 பெட்டிகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற 47 பெட்டிகளையும் உடனடியாக பிரித்துவிட்டோம். இதனால் தீயை விரைவாக கட்டுப்படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அதேபோல் எண்ணெய் என்பதால் தண்ணீர் மூலமாக தீயை அணைக்க முடியாது.
இதனால் ஃபோம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 வாகனங்கள் வந்துவிட்டன. இன்னும் கூடுதல் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை வேறு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் போக்குவரத்து துறை சார்பாகவும் மக்கள் எங்கும் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் பொதுமக்களையும் அப்புறப்படுத்தி பெரியகுப்பம் அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே போலீஸ் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications