ரூ 10 ஆயிரம் கட்டு.. இல்லாட்டி ஆதார் எண் ரத்து.. இப்படிக்கு Indian gavarmint-ஆ?.. மக்களே உஷார்!
சென்னை: நான் இந்திய அரசு அதிகாரி, நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் உங்கள் ஆதார் கார்டு ரத்து செய்யப்பட்டுவிடும் என மர்ம நபர் அனுப்பிய எஸ்எம்எஸ் வைரலாக்கப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் வளர வளர அதை பயன்படுத்தி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நவீனப்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை நல்லதுக்கு பயன்படுத்தாமல் சிலர் மோசடி செய்ய பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்போதெல்லாம் ஏடிஎம் கார்டு வருவதற்கு முன்னர் வங்கிக்கு பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி பல கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன.

பணம் எடுக்க
இதையடுத்து ஏடிஎம் மையத்தினுள்ளும் தனியாக பணம் எடுக்க செல்வோரை நோட்டமிட்டு மிரட்டி பணம் பறித்து சென்றனர். இதற்காக கத்தி, கூர்மையான ஆயுதங்கள், முகமுடி, கைகளுக்கு கிளவுஸ், வாகனங்கள் உள்ளிட்டவை வாங்க அதற்கென தனி செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தற்போது உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே கொள்ளை அடிக்கும் டெக்னிக்குகளை மோசடி பேர்வழிகள் கற்று தேர்ந்துவிட்டனர்.

கொள்ளை
புதிது புதிதாக டெக்னிக்குகளை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் போது சிக்கிக் கொண்டு அவர்களிடம் வாக்குமூலம் கேட்கும் போலீஸார் அவர்கள் பயன்படுத்திய டெக்னிக்குளை கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள். அந்த வகையில் பேஸ்புக்கில் நம்முடன் நட்பில் இருப்பவர் போல் பிரென்ட் ரிக்குவஸ்ட் கொடுப்பார்கள்.

யாருக்கோ விபத்து
அவ்வாறு கொடுத்துவிட்டால் நம்மிடம் நலம் விசாரித்து விட்டு யாருக்கோ விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே இந்த அக்கவுண்டில் கணிசமான தொகையை போடுமாறு கூகுள் பே, போன் பே, பே டிஎம் உள்ளிட்ட செயலிகளுக்கான போன் எண்ணை கொடுக்கிறார்கள். இதில் சிலர் சிக்கி ஏமாறுவதும் உண்டு. பலர் அய்யோ என்னாச்சுனு கேட்போம்னு அந்த நண்பருக்கு போன் போடும் போதுதான் தான் ஏமாற்றப்பட இருந்தோம் என்பதே தெரியவந்து சூதானமாக பணம் அனுப்புவதை தவிர்த்து விடுவார்கள்.

மெசேஜ்
தற்போது புதிய மோசடி வந்துள்ளது. அதாவது நகுல் ஜோஷி என்பவருக்கு ஹேங் அவுட்டில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நான் அரசு அதிகாரி, நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், இல்லாவிட்டால் ஆதார் எண்கள் ரத்து செய்யப்பட்டுவிடும், நன்றி, உடனடியாக பணம் செலுத்துங்கள் என கேட்கிறார்கள். இது குறித்து ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்த ட்விட்டரில் போட்டுள்ளார்.

பணத்தை கறக்க
அப்போது தனக்கு வேறு மாதிரியான ஏமாற்று மெசேஜ்கள் வருவதாக இன்னொரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார். சுமார் 3 தினங்களாக வடமாநிலத்தவர் ஒருவர் இவரிடம் பேசி பணத்தை கறக்க பார்க்கிறாராம். ஆனால் இவர் அதற்கெல்லாம் அசரவே இல்லை என கூறியுள்ளார். அந்த வாட்ஸ் ஆப் சாட்டுகளையும் அவர் இணைத்துளளார். அதில் எடுத்தவுடன் நீங்கள் ரொம்ப நல்லவங்கன்னு ஒரு பெரிய ஐஸ் பேக்டரியையே எடுத்து வைக்கிறார் அந்த நபர்.

வீடியோ கால்
பின்னர் ஒரு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. தயவு செய்து உதவி செய்யுங்கள் என்கிறார். அதற்கு இந்த நெட்டிசன் வீடியோ காலில் குழந்தையை காண்பிக்குமாறு கூறுகிறார். ஆனால் அவரோ குழந்தை மருத்துவமனையில் இருக்கிறது. நான் தன்னார்வலர் என்கிறார். அதற்கு நெட்டிசனோ, அதனால் என்ன, மருத்துவமனைக்கு சென்று வீடியோ கால் பேசுங்கள் என்கிறார்.

பெரிய தொகை வேண்டாம்
நான் உங்களிடம் பெரிய தொகையை கேட்கவில்லை. உங்களால் முடிந்த தொகையை அனுப்புங்கள். நாங்கள் எந்த மனநிலையில் இந்த மெசேஜை அனுப்புகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என பணம் செலுத்துவதற்கான ஒரு லிங்கை அனுப்புகிறார். ஆனால் நெட்டிசனோ நான் 50 ஆயிரம் கூட செலுத்த தயார். ஆனால் குழந்தையை காண்பியுங்கள் என்கிறார். இப்படியாக 3 தினங்களாக விடாமல் அந்த நபர் தொல்லை செய்வதாக கூறுகிறார்.

நேரடி தொடர்பு
சர்க்கார் கூட நேரடி தொடர்புல இருக்கீங்க. பயங்கரம் என்கிறார் இந்த வலைஞர். மக்களே வங்கியோ அரசாங்கமோ பொதுமக்களிடம் எந்த எண்ணையும் கேட்பதில்லை, பணம் போடுமாறு சொல்வதில்லை என புரிந்து கொண்டு ஏமாறாமல் இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications