இந்த போட்டோவை பாருங்க.. "இதுதாங்க சென்னை".. சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டரை வியக்க வைத்த போலீஸ்!
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர் ஒருவர் பகிர்ந்து புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக சென்னை தீவிரமாக தயாராகி வருகிறது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்கி உள்ளது. மாமல்லபுரத்தில் மட்டுமின்றி சென்னை முழுக்க இதற்காக அலங்காரம் செய்யப்பட உள்ளது

சென்னை செஸ்
சென்னையில் மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியில் ஏறத்தாழ 187 நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக புதிதாக பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோவான "தம்பி" குதிரை பொம்மை வைக்கப்பட்டு உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
இந்த நிலையில் நேற்று செஸ் ஒலிம்பியாட் நடக்கும் அரங்கத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு முதல் ஆளாக காய்களை நகர்த்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் அரங்கை பார்வையிட்டு, அங்கு இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதேபோல் அங்கு வீரர்களுக்காக தயார் செய்யப்பட்ட இரவு உணவுகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். எதாவது குறை இருக்கிறதா? வீரர்கள் யாராவது புகார்கள் கொடுத்தனரா? என்று விசாரித்தார்.

ஸ்டாலின்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சென்றதும் பாதுகாப்பிற்கு இருந்த சில போலீசார் அங்கு செஸ் விளையாட தொடங்கினார்கள். செஸ் விளையாட தெரிந்த போலீசார் சிலர் இரவில் எல்லோரும் உறங்கிய பின் ஓய்வு எடுக்கும் நேரத்தில் செஸ் விளையாடினார்கள். ஆர்வமுடன் நீண்ட நேரம் இவர்கள் செஸ் விளையாடிய சம்பவம் அங்கு பலரின் கவனத்தை ஈர்த்தது. கிட்டத்தட்ட 8 போலீசார் இரவு வரை சில மணி நேரம் செஸ் விளையாடினார்கள்.

சென்னை போலீஸ்
இதை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பகிர்ந்து பாராட்டி உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் செஸ் பயிற்சியாளர் மைக்கேல் ரஹால் இதை ஷேர் செய்து, உள்ளூர் போலீஸ் கூட இடைவேளையின் போது செஸ் விளையாடுகிறார்கள்! சென்னைக்கு செஸ் மீதான ஆர்வம் மிக அதிகம் என்று பாராட்டி உள்ளார். இன்னும் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இதுதான் சென்னை என்று புகழ்ந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications