சொகுசு வீடு, முஸ்டாங் கார் இருந்தும் வெறுமை! அமெரிக்கக் கனவின் இருண்ட பக்கத்தை கூறிய இந்திய செஃப்
நியூயார்க்: அமெரிக்காவில் போய் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம், சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று வந்த இந்திய சமையல் கலைஞர் கார்த்திக் சௌகான் தனிமை குறித்த உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வெளிநாட்டில் செட்டில் ஆகி , டாலரில் சம்பாதிக்க வேண்டும் என்பது இன்னமும் லட்சக்கணக்கான இந்தியர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. ஆனால், அந்தக் கனவு நனவாகி, கையில் நிறையப் பணம் இருந்தும் மனம் வெறுமையாக உணர்ந்தாலும் அதனை வைத்து என்ன செய்வது? என்று இன்ஸ்டாகிராமில் கார்த்திக் சவுகான் என்ற இந்திய சமையல் கலைஞர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான வீடியோ வெளிநாட்டு வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

வெளிநாட்டில் வெற்றியைப் பெறலாம் என்றாலும், அன்புக்குரியவர்களின் துணையை இழக்க நேரிடும் என்பதை இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது.
இந்த வீடியோவில், கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருவதாக கார்த்திக் கூறுகிறார். அவருக்குச் சொந்தமாக ஒரு ஆடம்பரமான வீடு உள்ளது. முஸ்டாங் காரை ஓட்டுகிறார். எல்லா வசதிகள் நிறைந்த முக்கியமான பகுதியில் வசிக்கிறார். ஆனாலும், இந்தத் தீபாவளியன்று இந்தியா முழுவதும் வீடுகள் விளக்குகளாலும் கொண்டாட்டங்களாலும் ஒளிரும் நிலையில், அன்புக்குரியவர்களின் அரவணைப்பும் சிரிப்பும் இல்லாமல், அமைதிக்கு மத்தியில் தனியாக இருக்கிறார் கார்த்திக்.
தனது வீடியோவில் அவர் , ஆள்நடமாட்டமற்ற சாலைகளையும் வெறிச்சோடிக் கிடக்கும் குடியிருப்புப் பகுதியையும் காட்டியபடி பேசிய கார்த்திக், "என்னிடம் எல்லாமே இருக்கிறது. ஆனால், பேசுவதற்கு யாருமே இல்லை. இப்போது இந்த வெறிச்சோடிய தெருக்களிடம்தான் பேச வேண்டுமா? இப்போது இரவு 8.30 மணிதான் ஆகிறது. ஆனால், யாருமே வசிக்காத இடத்தைப் போல சுற்றிலும் இவ்வளவு அமைதியாக இருக்கிறது.
இந்தியாவில் நமது வாழ்க்கை குடும்பத்தினருடனும் அண்டை வீட்டாருடனும் இணைந்தே இயங்கும் . முன்கூட்டியே தெரிவிக்காமல் உறவினர்கள் வீட்டுக்கு வருவது, அண்டை வீட்டார் நம்மைப் பற்றி விசாரிப்பது, பண்டிகைகளின்போது ஏற்படும் ஆரவாரம் என இவை அனைத்தும் நமது வாழ்க்கையை உற்சாகமாக வைத்திருக்கும். இதற்கு மாறாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்குக்கூட முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது.
நீங்கள் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கும் வரை மட்டுமே அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உண்மையான மகிழ்ச்சி என்பது பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோருடன் இருப்பதில்தான் கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியைப் பணத்தால் வாங்க முடியாது" என்றார்.
வெற்றியின் ஏணியில் ஏறி உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும், தங்களது இதயத்தின் ஓரத்தில் அன்புக்குரியவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தைச் சுமந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டு இந்தியர்களின் கதையாகவே கார்த்திக்கின் கதை இருக்கிறது. பணத்தால் கிடைக்கும் வசதிகள் ஒருபோதும் உறவுகளின் அன்பையும் அரவணைப்பையும் ஈடுசெய்ய முடியாது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களுக்கான சமூக உறவுகளை வளர்த்துக்கொள்வதும், பண்டிகைக் காலங்களில் நண்பர்களை வீட்டுக்கு அழைப்பதும் இந்தத் தனிமையை ஓரளவுக்குக் குறைக்கலாம். ஆனால், சொந்த வீட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடு கிடையாது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நெட்டிசன்கள் இதற்கு மாறாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், பணம் சம்பாதித்த பிறகுதான் கார்த்திக் செளகானுக்கு வாழ்க்கையின் முக்கியமான உண்மை புரிந்திருக்கிறது. அதே நேரத்தில், குடும்பத்தினரைப் பிரிந்து இருப்பது வருத்தமாக இருந்தால், சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு அவரை யாரும் தடுக்கவில்லை " என்றார்.
மற்றொரு இணையவாசி கூறுகையில் , "இந்த ரீலை எடுப்பதால் என்ன பயன், சகோதரா? பணம் சம்பாதிப்பதற்காகத்தானே அங்கு சென்றீர்கள்? அதையும் சம்பாதித்துவிட்டீர்கள். அதனால் வாழ்த்துகள். பிறகு ஏன் குறை சொல்ல வேண்டும்? எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பெற்றுவிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் சிலர் இன்னும் ஆழமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். குடும்பத்தினருடன் இருப்பதில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றாலும், வசதியான வாழ்க்கையை ஒன்றாகக் கட்டமைப்பதற்கு பணம் தான் இங்கு அவசியம் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் இல்லாத காரணத்தால் சொந்த வீட்டிலேயே புறக்கணிக்கப்படுவது, அன்புக்குரியவர்களைப் பிரிந்து வெளிநாட்டில் தனிமையில் இருப்பதைவிடவும் மோசமாக உணரப்படலாம் என்று மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
